பிறந்தநாள் வாழ்த்துக்கள், ரிஷப் ஷெட்டி! 'கந்தாரா' இயக்குனர் - நடிகர் பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள்
நடிகரும் இயக்குனருமான ரிஷப் ஷெட்டி, கடந்த ஆண்டு நாடு முழுவதும் பிரபலமடைந்தார். விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்ற 'காந்தாரா' திரைப்படத்திற்கு நன்றி! ரிஷப் ஷெட்டி, ஏற்கனவே 'கிரிக் பார்ட்டி','ரிக்கி' போன்ற வெற்றி படங்களை தந்தவர் என்றாலும், காந்தாரா அவரை சமகாலதில் பலராலும் விரும்பப்பட்ட நடிகர்களில் ஒருவராக மாற்றியது. அவரது 40வது பிறந்தநாளில், அவரைப் பற்றி மேலும் சில தகவல்கள். ரிஷப் ஷெட்டி, கர்நாடகாவின் உடுப்பியில் உள்ள கெராடி என்ற கிராமத்தில் பிறந்தார். உள்ளூரில் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, விஜயா கல்லூரியில் வணிகவியல் இளங்கலைப் பட்டப்படிப்பைத் தொடர்ந்தார், பின்னர் பெங்களூருவில் உள்ள அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரியில், திரைப்பட இயக்கத்தில் டிப்ளமோ படித்தார்.
சிறு வயதிலேயே நாடகம் மூலம், தனது கலை தாகத்தை மெருகேற்றிய ஷெட்டி
சினிமாவில் வெற்றிபெறும் முன், அவர் பல சின்ன வேலைகளை செய்துள்ளார். அதில் ஒன்று மினரல் வாட்டர் கேன்களை சப்ளை செய்வது! ஹோட்டல்களில் கூட வேலை செய்துள்ளார் இவர். இவரின் உண்மையான பெயர் பிரசாந்த். சினிமாவில் ஜெயிக்க, நண்பர் ஒருவர் எண் கணிதத்தின் அடிப்படையில் அவருக்கு ரிஷப் என்று பெயர் வைத்தாராம். இவர் குழந்தைகளுக்காக எடுத்த, 'சர்க்காரி ஹி' என்ற திரைப்படம், 2018 ஆம் ஆண்டுக்கான, சிறந்த குழந்தைகள் திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்காக, ரிஷப் ஷெட்டி, கதை மற்றும் திரைக்கதையை எழுதி, திரைப்படத்தையும் தயாரித்துள்ளார்.