'Finance With Harish' ஹரீஷ் தற்கொலை வழக்கு: யூடியூபர் ஜேசன் சாமுவேல் கைது
செய்தி முன்னோட்டம்
சென்னையில் நிதி ஆலோசகரும், 'Finance With Harish' நிறுவனருமான ஹரீஷ் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், அவரைத் தற்கொலைக்கு தூண்டியதாகக் கூறப்படும் சக யூடியூபரும் தொழில்முனைவோருமான ஜேசன் சாமுவேலை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னையில் உள்ள தனது இல்லத்தில் 27 வயதான ஹரீஷ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஹரீஷின் தந்தை அளித்த புகாரில், ஜேசன் சாமுவேல் தனது மகனின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ச்சியாக அவதூறு வீடியோக்களை வெளியிட்டதாகவும், திட்டமிட்டு ஆட்களை ஏவி ஹரீஷின் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை 'மாஸ் ரிப்போர்ட்' செய்து முடக்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இறப்புக்கு முன்பாக ஹரீஷ் பதிவு செய்த கடைசி வீடியோவில், தன்னை அச்சுறுத்தியது குறித்தும் குறிப்பிட்டிருந்தார்.
விசாரணை
போலீசாரின் தீவிர விசாரணை
புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் வல்லுநர்களின் உதவியுடன் விசாரணையை தீவிரப்படுத்திய கானத்தூர் போலீசார், ஜேசன் சாமுவேலை பிடித்து விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர்.
சைபர் புல்லியிங் மற்றும் தனிநபரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே, போலீசாரிடம் சிக்குவதற்கு முன்பாக விளக்கம் அளித்திருந்த ஜேசன் சாமுவேல், "ஹரீஷிடம் உரிய செபி உரிமம் இல்லை என்பதையும், ஆம்ஃபி பதிவை தவறாகக் காட்டி வந்ததையுமே பொதுமக்களின் நலன் கருதி சுட்டிக்காட்டினேனே தவிர, தற்கொலைக்குத் தூண்டவில்லை" என்று வாதிட்டிருந்தார்.
எனினும், தொடர்ச்சியான அவதூறு தாக்குதல்களுமே இந்த விபரீத முடிவுக்கு காரணம் என ஹரீஷின் தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.