'கண்ணகி' முதல் 'பைட் கிளப்' வரை- தமிழில் இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களின் தொகுப்பு
இந்த ஆண்டு முடிவடைய இன்னும் இரண்டு வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், திரையரங்குகளில் வெளியாவதற்கு பல படங்கள் காத்திருக்கின்றன. தமிழில் கடந்த வாரம் ஐந்து படங்கள் வெளியான நிலையில், இந்த வாரம் 4 படங்கள் வெளியாக உள்ளன. மேலும், கடந்த வாரம் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட கூஸ் முனிசாமி வீரப்பன் ஆவணத் தொடர், இந்த வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாரம், தமிழில் திரையரங்குகள் மற்றும் ஓடிடிகளில் வெளியாகும் படங்கள் மற்றும் சீரிஸ்கள் குறித்து பார்க்கலாம்.
கண்ணகி
கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் ஜோயா ஆகிய நான்கு பெண்களின் வாழ்வியலை கூறும் படம் கண்ணகி. யூடியூபர் யஷ்வந்த் கிஷோர் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். "நமது சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் வாழும் ஒரே ஒடுக்கப்பட்ட குழு பெண்கள் தான்" என டிரெய்லரின் நடுவில் தோன்றும், ஈவ்லின் கன்னிங்ஹாம் மேற்கோள் மூலம், கண்ணகி படம் எதைப் பற்றி பேச முயற்சிக்கிறது என்பதை யூகிக்க முடிகிறது. டிசம்பர் 15ஆம் தேதி, இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
ஃபைட் கிளப்
உரியடி திரைப்படங்களின் மூலம் பிரபலம் அடைந்த விஜயகுமாரின் மூன்றாவது திரைப்படம் ஃபைட் கிளப். கால்பந்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு, தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. கோவிந்த் வசந்தா படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில், மோனிஷா மோகன் மேனன், அவினாஷ் ரகுதேவன், ஷங்கர் தாஸ், கார்த்திகேயன் சந்தானம் மற்றும் சரவண வேல் உள்ளிட்ட மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படமும் டிசம்பர் 15ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாகியது.
ஆலம்பனா
பாரி கே விஜய் இயக்கியுள்ள படத்தில் வைபவ் ரெட்டி மற்றும் பார்வதி முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பேண்டஸி படமான இதில், 'ஜினியாக' முனீஸ்காந்த் நடித்துள்ளார். யோகி பாபு, ஆனந்தராஜ், ரோபோ சங்கர், திண்டுக்கல் ஐ லியோனி, பாண்டியராஜ், முரளி சர்மா, கபீர் சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். தீவிர ப்ரோமோஷன் வேலைகள் மூலம் படத்திற்கான எதிர்பார்ப்பை படக்குழுவினர் அதிகரித்துள்ளனர்.
நா நா
சசிகுமார் மற்றும் சரத்குமார் நடிப்பில் நீண்டகாலமான திரைக்கு வர காத்திருந்த நா நா திரைப்படம் இறுதியாக, டிசம்பர் 15ம் தேதி வெளியாகிறது. நிர்மல் குமார் இயக்கியுள்ள இப்படத்தில், பாரதிராஜா, சித்ரா சுக்லா, ரேஷ்மா வெங்கடேஷ், பகவதி பெருமாள், பிரதீப் ராவத், எஸ்கே கனிஷ்க் மற்றும் டெல்லி கணேஷ் ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கூஸ் முனிசாமி வீரப்பன்
ஜீ 5 ஓடிடி சார்பில் சந்தன கடத்தல் வீரப்பன் குறித்து உருவாக்கப்பட்டுள்ள ஆவண தொடர் கூஸ் முனிசாமி வீரப்பன். கடந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னை பெருவெள்ளத்தால் ரிலீஸ் தேதி இந்த வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வீரப்பன் வாழ்வில் நடந்த பல்வேறு சம்பவங்களை, அவர் மற்றும் நக்கீரன் கோபால், ஹிந்து என் ராம், பா பா மோகன், சுப்பு என்ற சுப்ரமணியன், அலெக்சாண்டர் ஐபிஎஸ், ரோகினி, ஜீவா தங்கவேல், மோகன் குமார், தமயந்தி ஆகியோர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். இத்தொடர் டிசம்பர் 14ஆம் தேதி வெளியாகிறது.