பெப்ஃசியில் திருநங்கைகளுக்கும் வாய்ப்பு என பெப்ஃசி தலைவர் ஆர் கே செல்வமணி அறிவிப்பு
தென்னிந்திய சினிமா தொழிலாளர்கள் சம்மேளமான, 'பெப்ஃசி' தலைவர் ஆர் கே செல்வமணி, நேற்று வெளியிட்ட அறிக்கையில், இயக்குனர்கள், எழுத்தாளர்கள் என சினிமா சார்ந்த 24 தொழில் துறைகளில் திருநங்கைகளுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். பலத்த வரவேற்பை பெற்றுள்ள இந்த அறிவிப்பில், தகுதி வாய்ந்த திருநங்கைகளுக்கு, அவர்கள் பணிபுரிய விரும்பும் அந்தந்த சினிமா சார்ந்த தொழில்துறை பிரிவுகளுக்கு ஏற்ப உறுப்பினர் அட்டையும் வழங்கப்படும் என்றும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் திருநங்கைகளும் உறுப்பினர்களாக இணைக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளார். திரையில் திருநங்கைகளுக்கு வாய்ப்பு வழங்கவேண்டும் என்ற ஆர் கே செல்வமணி அறிவிப்பை, திருநங்கைகள் சமூகத்தினரும் வரவேற்றுள்ளனர்.
மிஷ்கினின் கோரிக்கையினால் ஏற்பட்ட நல்ல திருப்பம்
RK செல்வமணியின் இந்த அறிவிப்பிற்கு முதற்காரணம் இயக்குனர் மிஷ்கின். மிஷ்கினின் சகோதரர், ஜி.ஆர்.ஆதித்யா எழுதி இயக்கியுள்ள படம் 'டெவில்' திரைப்படத்திற்காக மிஷ்கின் இசையமைப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய மிஷ்கின், "விஜய் சேதுபதியை வைத்து நான் இயக்கிவரும் புதிய படத்தின் படப்பிடிப்புக்காக சென்னை முழுக்க தேடி அலைந்து ஆறு திருநங்கைகளை கண்டுபிடித்தேன். துணை நடிகர்கள் குழுவில் திருநங்கைகளை சேர்க்க வேண்டும் என்று அவர்கள் சார்பாக நான் உங்களிடம் கோரிக்கை வைக்கிறேன்" எனக்கூறியதை அடுத்து, "உங்கள் கோரிக்கை இப்போதே ஏற்றுக் கொள்ளப்படுகிறது" என்று பதிலளித்தார் RK செல்வமணி.