விஜயராஜ் டு விஜயகாந்த்; கருப்பு எம்ஜிஆரின் 72வது பிறந்தநாள்
தமிழ் சினிமா பல திறமை வாய்ந்த கலைஞர்களை கொடுத்திருந்தாலும், அவர்களில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் கலைஞர்கள் வெகுசிலரே. மக்களின் மனம் நிறைந்த நாயகர்களில் கேப்டன் விஜயகாந்திற்கும் எப்போதும் நீங்காத இடம் உண்டு. அருப்புக்கோட்டையில் 1952 ஆகஸ்ட் 25 அன்று விஜயராஜ் அழகர்சாமியாக பிறந்த விஜயகாந்த் குடும்பம் சில வருடங்களிலேயே மதுரைக்கு இடம்பெயர்ந்தது. மதுரையில் தந்தையின் ரைஸ் மில்லை பார்த்துக் கொள்வது, நண்பர்களுடன் ஊர் சுற்றுவது என இருந்தாலும், சினிமா மீது கொண்ட காதல் காரணமாக ஒரு புகைப்படத்தை எடுத்துக் கொண்டு வாய்ப்பு சென்னை சென்னை சென்றார். 1978இல் மாதவன் என் கேள்விக்கு என்ன பதில் படத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு தம்பியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து பின்னர் கைநழுவிப் போனது.
வில்லன் டு ஹீரோ
1979இல் இனிக்கும் இளமை படத்தில் வில்லனாக அறிமுகமான விஜயகாந்த், தனது நடிப்புத் திறமையால் அதே ஆண்டு வெளியான அகல் விளக்கு படத்தில் நாயகனாக நடித்தார். விஜயகாந்திற்கு எஸ்.ஏ.சந்திரசேகரின் சட்டம் ஒரு இருட்டறை படம் ஆக்சன் ஹீரோ என்ற அந்தஸ்தைப் பெற்றுக் கொடுத்தது. ஒருபுறம் ரஜினி, கமல் என்ற ஜாம்பவான்கள் இருக்க, சத்யராஜ், மோகன், ராமராஜன் மற்றும் பிரபு என முன்னணி நடிகர்கள் பலரும் இருந்தாலும், தனக்கென ஒரு தனி பாணியை அமைத்துக் கொண்டு, மிக வேகமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக ஆனார். பொதுவாக எந்தவொரு நடிகரின் 100வது படமும் வெற்றி பெற்றதில்லை என்ற நிலையை மாற்றி கேப்டன் பிரபாகரன் படத்தை ஹிட்டாக கொடுத்தார். இதன்மூலமே அவருக்கு கேப்டன் என்ற அடைமொழியும் கிடைத்தது.
நிஜவாழ்க்கையிலும் ஹீரோவாக வாழ்ந்த விஜயகாந்த்
சினிமா மட்டுமில்லாமல் நிஜவாழ்க்கையிலும் பலரின் முன்னேற்றத்திற்கு விஜயகாந்த் உதவியுள்ளார். திரைப்பட படப்பிடிப்பில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் சரிசமமான உணவு வழங்க வேண்டும் என்பதை தொடங்கி வைத்தவரே அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே அவரை பொதுவாழ்வுக்கும் கொண்டுவந்த நிலையில், ஆரம்பத்தில் திமுகவுடன் இணைந்து செயல்பட்டவர், 2005இல் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். 2006 தேர்தலில் 10 சதவீத வாக்கு, 2011 தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி என முன்னேறினாலும், அதன் பின்னர் தொடர்ந்து சறுக்கி அரசியலில் அவரது வாழ்க்கை அஸ்தமனமானது. உடல்நலக் கோளாறால் பாதிக்கப்பட்ட அவர் 2023 டிசம்பர் 28 அன்று மறைந்தார். அவர் மறைந்தாலும், என்றும் மக்கள் மனதில் நீங்காது நிலைத்திருப்பார் என்பதை அவரது இறுதி ஊர்வலம் எடுத்துக் காட்டியது.