படகுகளுடன் வெள்ள நிவாரண பணியில் களம் இறங்கிய இயக்குனர் மாரி செல்வராஜ்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சுற்றியுள்ள கிராமங்களில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணியில் இயக்குனர் மாரி செல்வராஜ் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அம்மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாலைகள் உடைந்து, கிராமங்கள் தனித்தீவுகளாக காட்சி தருகின்றன. குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்வதால், அங்கே மக்கள் தவித்து வருகின்றனர். மீட்பு நடவடிக்கைகளில் அரசும், தன்னார்வலர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று, வெள்ளம் பாதித்த இடங்களை பார்வையிட விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைந்தார். அவருடன் இயக்குனர் மாரி செல்வராஜ்-உம் உடன் சென்றுள்ளார்.
களத்தில் இறங்கிய மாரி செல்வராஜ்
மாரி செல்வராஜ்-உம் தென்மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால், அவரும் களப்பணியில் ஆர்வத்துடன் கலந்துகொண்டார். தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம், முத்தலாங்குறிச்சி ஆகிய பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால், வெளியே வரமுடியாமல் தத்தளித்த நூற்றுக்கணக்கான மக்களை படகுகள் உதவியுடன் மீட்டு வந்தார். மேலும் அவர், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் படகுகள் கூட செல்ல முடியாத நிலையில் 20 கிராமங்கள் உள்ளதாகவும், அவர்களை மீட்பது சற்று சவாலாக இருப்பதாகவும், அங்குள்ள மக்கள் சாப்பாடு கூட கிடைக்காமல் தத்தளித்து வருவதாகவும் அவர்களை விரைவில் மீட்கும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். இரவு முழுக்க மீட்புப் படையுனருடன் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட அவர், எக்ஸ் தளம் வாயிலாகவும் மீட்பு பணிகள் குறித்த விவரங்களை பகிர்ந்து வருகிறார்.