'ஆயுத எழுத்து' படத்திற்குப் பிறகு மீண்டும் சூர்யாவை இயக்கும் மணிரத்னம்?
செய்தி முன்னோட்டம்
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநரான மணிரத்னம், நடிகர் சூர்யாவுடன் மீண்டும் புதிய திரைப்படத்திற்காக இணைய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் திரைத்துறையிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2004-ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'ஆயுத எழுத்து' திரைப்படத்தில் சூர்யா, மாதவன் மற்றும் சித்தார்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அப்படத்திற்குப் பிறகு சூர்யா, மணிரத்னம் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்கவில்லை. தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு சூர்யாவிடம் மணிரத்னம் கூறிய ஒரு கதையில் தேவையான மாற்றங்களைச் செய்து, மீண்டும் அவரைச் சந்தித்துப் பேச இயக்குநர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இக்கதை சூர்யாவுக்கு பிடிக்கும் பட்சத்தில், 22 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைய வாய்ப்புள்ளது.
அறிவிப்பு
கதை மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இப்பேச்சுவார்த்தை தற்போது ஆரம்பகட்டத்தில் மட்டுமே உள்ளது.
மாற்றியமைக்கப்பட்ட கதையைச் சூர்யா ஏற்றுக்கொள்வதைப் பொறுத்தே படப்பிடிப்பு தேதி, தயாரிப்பு நிறுவனம் மற்றும் பிற நடிகர்கள் குறித்த தகவல்கள் உறுதியாகும்.
இதனால் இது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.
இயக்குநர் மணிரத்னம் தற்போது விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
கொல்கத்தாவின் ஹவுரா பாலம் உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் பணிகள் முடிந்த பிறகே சூர்யா - மணிரத்னம் கூட்டணியின் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.