தனுஷ், மம்மூட்டி நடிக்கும் 'ஓம்' படத்திற்கு U/A சான்றிதழ்: நவம்பர் 20 உலகமெங்கும் ரிலீஸ்
செய்தி முன்னோட்டம்
'அமரன்' படப் புகழ் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர்கள் தனுஷ் மற்றும் மலையாள மெகா ஸ்டார் மம்மூட்டி ஆகியோர் முதல்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படமான 'ஓம்', மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தின் 'யு/ஏ' சான்றிதழைப் பெற்றுள்ளது. சுமார் 2 மணி நேரம் 58 நிமிடங்கள் ஓடக்கூடிய இத்திரைப்படம் வரும் நவம்பர் 20-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான வொண்டர்பார் ஃபிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக அக்டோபர் 16-ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த இப்படம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' மற்றும் சூர்யா படங்களின் வெளியீட்டிற்கு மரியாதை அளிக்கும் விதமாக நவம்பர் 20-க்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வில்லன்
செம்மரக் கடத்தல் பின்னணியில் உளவுத்துறை அதிகாரி தனுஷ்
அண்மையில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
இரண்டு கோயில் நகரங்களுக்கு இடையே இயற்கைக்கு எதிராக நடைபெறும் செம்மரக் கடத்தல் பின்னணியை மையமாகக் கொண்டு இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் ஆந்திர மாநில காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை ஐபிஎஸ் அதிகாரியாக நித்யா ரெட்டி என்ற கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார்; கடத்தல் கும்பலை ஊடுருவிப் பிடிக்க அவர் முன்னெடுக்கும் ரகசிய நடவடிக்கைக்கே 'ஆபரேஷன் மோல்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
மறுபுறம், தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு உளவுப்பிரிவு அதிகாரியாக 'டி 402' என்ற ரகசிய அடையாளத்துடன் தனுஷ் நடித்துள்ளார்.
ரசிகர்களுக்குப் பெரும் இன்ப அதிர்ச்சியாக, இப்படத்தில் 'ரெட் ஹில்ஸ்' கார்த்திகேயன் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் மம்மூட்டி மிரட்டியுள்ளார்.
தொழில்நுட்ப கலைஞர்கள்
பிரம்மாண்ட நட்சத்திரப் பட்டாளம்
தனுஷின் திரைப்பயணத்தில் மிக அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தில், தனுஷின் மனைவியாக ரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ரீலீலா நடித்துள்ளார்.
மேலும், பாலிவுட் மூத்த நடிகர் நசீருதீன் ஷா மற்றும் இந்திரன்ஸ் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு எழில் அரசு ஒளிப்பதிவும், ஆர். கலைவாணன் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.
விண்டேஜ் தனுஷின் அதிரடி ஆக்ஷனை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், தணிக்கைச் சான்றிதழ் கிடைத்துள்ளதால் முன்பதிவு பணிகள் சூடுபிடித்துள்ளன.