தாதாசாகெப் பால்கே விருது 2023- பழம்பெரும் நடிகை வஹீதா ரஹ்மானுக்கு அறிவிப்பு
இந்த ஆண்டுக்கான தாதாசாகெப் பால்கே விருது பழம்பெரும் ஹிந்தி நடிகைக்கான வஹீதா ரஹ்மானுக்கு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. தாதாசாகெப் பால்கே விருது இந்தியாவில் சினிமா துறையினருக்கு வழங்கப்படும் உச்சபட்ச விருதாகும். இந்திய திரைத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு இந்த விருதை 1969ம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது. இந்திய சினிமாவின் தந்தை எனப் போற்றப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே நினைவாக இந்த விருது வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தாதாசாகெப் பால்கே விருது வஹீதா ரஹ்மானுக்கு வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
வஹீதா ரஹ்மானின் சினிமா பயணம்
வஹீதா ரஹ்மான் தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் பிறந்தவர். முறைப்படி பாரதம் கற்ற இவருக்கு மருத்துவர் ஆவது தான் கனவாக இருந்துள்ளது. இருப்பினும் தந்தை மறைவு, இவரை சினிமாவுக்கு அழைத்து வர, 1955 ஆம் ஆண்டு ரோஜுலு மராயி என்ற தெலுங்கு பட பாடல் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். தமிழில் 1955 ஆம் ஆண்டு வெளியான 'காலம் மாறிப்போச்சு' படத்தில் குரூப் டான்ஸர் ஆகவும், 1956 ஆண்டு வெளியான 'அலிபாபாவும் 40 திருடர்களும்' படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடி இருந்தார். பின் 1956 ஆம் ஆண்டு பாலிவுட்டில் ராஜ் கோஸ்லா இயக்கிய சிஐடி படத்தின் மூலம் அறிமுகமாகி, காலா பஜார், கைடு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தார்.
மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரின் வாழ்த்து
வஹீதா ரஹ்மான், கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2' திரைப்படத்தில், கமலின் தாயாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தாதாசாகெப் பால்கே விருது அறிவிப்பு குறித்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், வஹீதா ரஹ்மானுக்கு இந்த விருதை அறிவிப்பதில் தான் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைவதாக பதிவிட்டிருந்தார். "மேலும் இந்திய நாடாளுமன்றத்தில், 'நாரி சக்தி வந்தன் ஆதினியம்' மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கும் இந்த வேளையில் தாதாசாகிப் பால்கே விருது ஒரு பெண்ணிற்கு அறிவிக்கப்பட்டிருப்பது திரைத்துறையில் உள்ள பெண்களுக்கு ஒரு சன்மானம்" எனவும் பதிவிட்டுள்ளார்.