சர்ச்சை பேச்சு விவகாரம்: மன்சூர் அலிகான் மீது பாய்ந்தது வழக்கு!
'லியோ' படத்தில், நடிகை திரிஷாவுடன் திரையை பகிர இயலாததை கொச்சையாக வெளிப்படுத்திய நடிகர் மன்சூர் அலிகான் மீது, தேசிய மகளிர் ஆணையம் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார், இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். சில தினங்களுக்கு முன்னர், மன்சூர் அலிகான் நிருபர்களை சந்தித்து பேசி இருந்தார். அதில், த்ரிஷாவிற்கும், தனக்கும் லியோ படத்தில் காட்சிகள் இல்லாததை தகாத வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்தி இருந்தார். இது த்ரிஷாவின் கவனத்திற்கு வரவே, அவர் அதை வன்மையாக கண்டித்து, இனி எப்போது அவருடன் நடிக்கப்போவதில்லை எனக்கூறினார். மன்சூர் அலிகானின் இந்தப் பேச்சுக்கு திரைத் துறையில் இருந்து மட்டும் அல்லாமல் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
மன்னிப்பு கேட்க மறுக்கும் மன்சூர் அலிகான்
இந்த விவகாரத்தில், மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்கவேண்டும் என தென்னிந்திய நடிகர் சங்கமும், தயாரிப்பாளர்கள் சங்கமும் அறிக்கை வெளியிட்ட நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த மன்சூர், நடிகை த்ரிஷாவை பற்றி, தான் தவறாக ஏதும் பேசவில்லை என்றும், தன்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல் நடவடிக்கை எடுத்ததன் மூலம், நடிகர் சங்கம் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது என்றும், இவ்விவகாரத்தில் தான் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் கூறினார். இதற்கிடையே, லியோ படத்தின் தயாரிப்பாளர் தரப்பும்,"நடிகர் மன்சூர் அலிகானின் அவமரியாதையான பேச்சால் நாங்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளோம். இத்தகைய நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் மரியாதை மற்றும் சமத்துவத்தின் நமது முக்கிய மதிப்புகளுக்கு முற்றிலும் முரணானது. இந்த நடத்தையை நாங்கள் ஒன்றுபட்டு கண்டிக்கிறோம்" என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.