"தமிழ்த் திரையுலகிற்கு மகுடம்!" 10 தேசிய விருதுகளை வென்ற தமிழ் சினிமா கலைஞர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து
செய்தி முன்னோட்டம்
மத்திய அரசால் வழங்கப்படும் 2024 ஆம் ஆண்டிற்கான 72வது தேசிய திரைப்பட விருதுகள் அதிகாரப்பூர்வமாக நேற்று (ஜூலை 18) அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த உயரிய விருதுப் பட்டியலில், பல்வேறு பிரிவுகளின் கீழ் ஒட்டுமொத்தமாக 10 தேசிய திரைப்பட விருதுகளை வென்று தமிழ்த் திரையுலகம் பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது. தேசிய அளவில் மாபெரும் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள தமிழ்த் திரையுலகக் கலைஞர்கள் மற்றும் சாதனையாளர்களுக்குத் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தற்பொழுது தனது மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷ்
தனுஷின் ராயன் மற்றும் கேப்டன் மில்லர் படங்களுக்கு விருது
நடிகர் தனுஷ் இயக்கி, முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துப் பெரிய அளவில் வசூல் சாதனை படைத்த ராயன் திரைப்படத்திற்கு இந்த ஆண்டின் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் விழுமியங்களை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படத்திற்கான விருது கிடைத்துள்ளது.
மேலும், இந்தத் திரைப்படத்தில் சிறப்பான நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதற்காக நடிகர் தனுஷுக்கு சிறப்புப் பிரிவில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமரன் திரைப்படம்
அமரன் திரைப்படத்திற்கு மூன்று தேசிய விருதுகள்
கடந்த 2024 ஆம் ஆண்டில் வெளியாகிப் பாக்ஸ் ஆபீஸில் அசுர வேட்டையாடிய அமரன் திரைப்படம் மூன்று முக்கிய பிரிவுகளில் தேசிய விருதுகளை அள்ளியுள்ளது.
இப்படத்தை மிக நேர்த்தியாக இயக்கியதற்காக ராஜ்குமார் பெரியசாமிக்கு சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், படத்தின் விறுவிறுப்பைக் கூட்டிய ஆர்.கலைவாணனுக்கு சிறந்த படத்தொகுப்பிற்கான விருதும், திரையரங்குகளில் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதும் அறிவிக்கப்பட்டுப் பெருமை சேர்த்துள்ளது.
மகாராஜா திரைப்படம்
மகாராஜா திரைப்படத்தின் சண்டைப் பயிற்சி மற்றும் நடிப்பு
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்ற மகாராஜா திரைப்படமும் இந்த தேசிய விருது பட்டியலில் இரண்டு முக்கிய இடங்களைப் பிடித்துள்ளது.
இப்படத்தில் மிரட்டலான அதிரடிக் காட்சிகளை வடிவமைத்ததற்காக அனல் அரசுக்குச் சிறந்த சண்டைப் பயிற்சிக்கான விருது கிடைத்துள்ளது.
அதுமட்டுமின்றி, அப்படத்தில் மிக எதார்த்தமான மற்றும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இளம் நடிகை சாச்சனா நமிதாஸுக்குச் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.
மெய்யழகன் மற்றும் ப்ளூ
மெய்யழகன் மற்றும் ப்ளூ படங்களின் ஒலி வடிவமைப்பு
கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் இதயங்களை வென்ற மெய்யழகன் திரைப்படத்திற்காக, ஒலி வடிவமைப்பாளர் சுரேன் ஜிக்கு சிறப்புப் பிரிவில் சிறந்த ஒலிக்கலவைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
திரைப்படங்கள் மட்டுமின்றி, ஆவண மற்றும் குறும்படப் பிரிவிலும் தமிழ் சினிமா தடம் பதித்துள்ளது.
ப்ளூ என்ற சிறந்த தமிழ்க் குறும்படத்திற்காக டி.எஸ்.ஹரிஹரசுதனுக்கு சிறந்த ஒலி வடிவமைப்புக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுத் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளது.
வாழ்த்து
வருங்காலத்திலும் பல விருதுகளைப் பெற முதல்வர் வாழ்த்து
ஒரே ஆண்டில் 10 தேசிய திரைப்பட விருதுகளை தமிழ்த் திரையுலகம் அள்ளியிருப்பதை ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் மற்றும் தமிழ் சினிமாவிற்கும் கிடைத்த மாபெரும் பெருமைக்குரிய தருணமாகத் தனது அறிக்கையில் முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
சாதனைகள் படைத்த அனைத்துத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களைப் பாராட்டியுள்ள அவர், வருங்காலங்களிலும் தமிழ்த் திரையுலகம் உலக அரங்கிலும், தேசிய அளவிலும் மேலும் பல உயரிய விருதுகளைப் பெற்றுத் தொடர்ந்து சாதனை படைத்திட வேண்டும் எனத் தனது வாழ்த்துகளை நிறைவு செய்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
தேசிய திரைப்பட விருதுகளை வென்றுள்ள தமிழ்த் திரையுலக கலைஞர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் வாழ்த்து#CMJosephVijay pic.twitter.com/dRAZrnVLXS
— CMOTamilNadu (@CMOTamilnadu) July 19, 2026