இசைக்கலைஞர்கள் சங்கத்திற்காக இணையும் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்
செய்தி முன்னோட்டம்
சென்னை வடபழனி கமலா திரையரங்கம் அருகே பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் சினிமா இசைக் கலைஞர்கள் சங்கத்தின் பழைய கட்டடத்தை இடித்துவிட்டு, ரூ.30 கோடி மதிப்பீட்டில் 10 மாடிகள் கொண்ட புதிய நவீன கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இசையமைப்பாளர்கள், பாடகர்கள் மற்றும் வாத்தியக் கலைஞர்கள் உறுப்பினர்களாக உள்ள இந்த சங்கத்தின் புதிய கட்டடப் பணிகளுக்கான நிதியைத் திரட்டுவதற்காக, சென்னை, ஹைதராபாத், குஜராத், சிங்கப்பூர், துபாய் ஆகிய இடங்களில் முன்னணி இசையமைப்பாளர்களின் பிரம்மாண்ட இசைக்கச்சேரிகளை நடத்தச் சங்க நிர்வாகம் மற்றும் அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.
நிதி திரட்டல்
இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கச்சேரி மூலம் நிதி திரட்டல்
சொந்த சங்கக் கட்டடத்திற்கான நிதி ஆதாரம் என்பதால், இசைஞானி இளையராஜா மற்றும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் இந்த இசை நிகழ்ச்சிகளை நடத்தித் தர முழு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இவர்களுடன் மற்ற முன்னணி இசையமைப்பாளர்களும் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்க முன்வந்துள்ளனர். மேலும் முன்னணி பின்னணிப் பாடகர்கள் பலரும் இந்த மேடைகளில் பங்கேற்றுப் பாட உள்ளனர்.
ஒரு தனியார் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் இந்த 10 மாடி கட்டட கட்டுமானப் பணிகளை அடுத்த 3 ஆண்டுகளுக்குள் முழுமையாக முடித்துத் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
கட்டிடப் பணிகள்
தயாரிப்பாளர் சங்கத்தின் திட்டம்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடம் இந்த ஆண்டு இறுதிக்குள் சென்னை தி.நகரில் திறக்கப்படவுள்ளது. அதேபோல் சென்னை அண்ணா சாலையில் உள்ள பிலிம் சேம்பர் வளாகமும் திரையரங்கம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் விரைவில் திறப்பு விழா காணவுள்ளது.
இந்த வரிசையில் தற்போது இசைக்கலைஞர்கள் சங்கமும் புதிய கட்டடப் பணிகளைத் தொடங்கியுள்ளது. இதற்கிடையே, பிலிம் சேம்பர் வளாகத்திலேயே தற்காலிகமாக இயங்கி வரும் தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும் தங்களுக்கெனச் சொந்த கட்டிடம் கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது.
அதற்காக அடுத்த ஆண்டு இளையராஜா மற்றும் அனிருத் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகளை நடத்தி நிதி திரட்டவும், அதன் மூலம் உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவும் தயாரிப்பாளர் சங்கம் திட்டமிட்டுள்ளது.