இசை கலைஞர்கள் சங்க தேர்தல்: புதிய தலைவரானார் சபேசன்
சர்ச்சைகளில் சிக்கியிருந்த இசை கலைஞர்கள் சங்க தேர்தல், நேற்று நடைபெற்ற நிலையில், இந்த தேர்தலில், சபேசன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட முன்னாள் சங்க தலைவர் தீனா, 248 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். முன்னதாக, தமிழ் திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்திற்கு கடந்த ஆண்டு தேர்தல் நடக்கவிருந்ததது. ஆனால், இசையமைப்பாளர் சபேசன் தொடர்ந்த வழக்கால் தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்தது, சென்னை உயிர்நீதிமன்றம். அதன்பின்னர், சங்க விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டு, அதற்கான தீர்மானத்திற்கு சங்கங்களின் பதிவாளரிடம் ஒப்புதல் பெறும் வரை, தேர்தல் நடத்த முடியாது என குறிப்பிட்டது நீதிமன்றம். எனவே கடந்த ஐந்து மாதங்களாக தள்ளி வைக்கப்பட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது.
தீனாவிற்கு எதிராக கிளம்பிய குரல்கள்
மறுபுறம், ஏற்கனவே இரண்டு முறை தலைவராக பதவி வகித்த தீனா, மீண்டும் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்தார். இதனை எதிர்த்து, இளையராஜா உட்பட மூத்த சங்க உறுப்பினர்கள் குரல் எழுப்பினர். இது குறித்து இளையராஜாவின் தம்பியும், இசையமைப்பாளருமான கங்கை அமரன், செய்தியாளர்களை சந்தித்து, தீனாவிற்கு எதிராக கடும் எச்சரிக்கை விடுத்தார். அவர் தெரிவித்தபடி, இசை கலைஞர்கள் சங்கத்தில் உள்ள விதிகளை மீறும் விதமாக, ஏற்கனவே இரண்டு முறை தலைவராக பதவி வகித்த தீனா, மீண்டும் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்திருப்பது கண்டனத்திற்கு உரியது என்றார். இது குறித்து, இளையராஜா சார்பாக தான் பேசவந்துள்ளதாக கூறினார். இதை தொடர்ந்து, நேற்று நடந்து முடிந்த தேர்தலில், இசையமைப்பாளரும், தேவாவின் தம்பியுமான சபேசன் தலைவர் பதவிக்கு வெற்றி பெற்றார்