சிரஞ்சீவியின் முன்னாள் மருமகன் சிரிஷ் பரத்வாஜ் உடல்நலக் குறைவால் காலமானார்
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் சிரஞ்சீவியின் முன்னாள் மருமகன் சிரிஷ் பரத்வாஜ் புதன்கிழமை காலை எதிர்பாராதவிதமாக மரணமடைந்தார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அவர் இறக்கும் போது ஹைதராபாத்தில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் நுரையீரல் நோய்க்கான சிகிச்சையில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சரியான காரணம் தெரியவில்லை என்றாலும், சில நெருங்கியவர்கள் சமூக ஊடக தளங்களில் மாரடைப்பு என்று தெரிவித்துள்ளனர். சிரிஷ் பரத்வாஜ் சிரஞ்சீவியின் இளைய மகள் ஸ்ரீஜா கொனிடேலாவை மணந்தவர் ஆவர்.
சிரிஷ் பரத்வாஜின் சர்ச்சைக்குரிய திருமணம்
விவரம் அறியாதவர்களுக்கு, சிரிஷ் பரத்வாஜூம், சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜாவை 2007இல் திருமணம் செய்து கொண்டார். கல்லூரி காலத்திலேயே காதலிக்க தொடங்கிய இவர்கள் இருவரின் திருமணத்திற்கும் பெற்றோர்கள் சம்மதிக்காத காரணத்தால், சென்னைக்கு ஓடி வந்து திருமணம் செய்துகொண்டனர். இந்த விவகாரம் அப்போது பெரும் சர்ச்சையை தூண்டியது. இந்த திருமணத்தை நிறுத்துவதற்காக சிரஞ்சீவி சென்னைக்கு விரைந்து வந்தபோதும், நிறுத்த முடியாத காரணத்தால் நொந்து போய் ஹைதராபாத்திற்கே திரும்பியதாகவும் கூறப்பட்டது. இருப்பினும், இவர்களின் திருமணம் சிறிது காலமே நீடித்தது. இவர்களுக்கு நிவ்ரதி என்ற மகள் பிறந்த பிறகு, 2011இல் இருவரும் விவாகரத்து செய்தனர். அதன்பிறகு, ஸ்ரீஜா தாய் வீட்டிற்கே திரும்பினார்.
விவாகரத்துக்குப் பிறகு சிரிஷ் பரத்வாஜின் வாழ்க்கை
ஸ்ரீஜாவிடமிருந்து விவாகரத்து பெற்ற பிறகு, சிரிஷ் பரத்வாஜ் மறுமணம் செய்துகொண்டு வழக்கறிஞர் பணியினை தொடர்ந்ததாக கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியில் (பாஜக) அவர் சேர்ந்தார். ஆனால் கட்சியில் அதிகம் செயல்படாததால் அவரது அரசியல் வாழ்க்கை பெரிதாக மேம்படவில்லை. அவரது முந்தைய திருமணத்தைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் இருந்தபோதிலும், விவாகரத்துக்குப் பிறகு அவர் சிரஞ்சீவியின் குடும்பத்துடன் இணக்கமான உறவைப் பேணி, சர்ச்சையற்ற வாழ்க்கையை நடத்தினார். அவரது அகால மரணம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.