Loading...
காசோலை மோசடி வழக்கு: நடிகர் விமல் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்
காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமல் தாக்கல் செய்த மனு இன்று தள்ளுபடி.

காசோலை மோசடி வழக்கு: நடிகர் விமல் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்

எழுதியவர் Vasuki
Nov 14, 2026
06:35 pm

செய்தி முன்னோட்டம்

'மன்னர் வகையறா' திரைப்படத் தயாரிப்புக்காகப் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தாமல் காசோலை மோசடி செய்த வழக்கில், தனக்கு எதிராக மோசடியாக ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கக் கோரி நடிகர் விமல் தாக்கல் செய்த மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (நவ. 14) தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே கீழமை நீதிமன்றத்தால் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு நடிகர் விமலுக்குப் பின்னடைவாக அமைந்துள்ளது.

கடன் விவகாரம்

கீழமை நீதிமன்றத்தின் ஓராண்டு சிறைத் தண்டனை

நடிகர் விமல் தயாரித்து நடித்த 'மன்னர் வகையறா' திரைப்படத்தின் தயாரிப்புச் செலவுகளுக்காக, சினிமா பைனான்சியர் கோபி என்பவரிடமிருந்து கடன் பெற்றிருந்தார்.

திரைப்படம் வெளியான பிறகும் உரிய கடன் தொகையை விமல் திருப்பிச் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனையடுத்து கடன் தொகைக்காக விமல் வழங்கிய காசோலைகள், வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாமல் திரும்பியதைத் தொடர்ந்து, பைனான்சியர் கோபி சென்னையில் உள்ள 11-ஆவது சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்குத் தொடர்ந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த ஜூலை 23-ஆம் தேதி நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்ததுடன், கடன் தொகையைத் திரும்ப வழங்கவும் உத்தரவிட்டிருந்தது.

மேல்முறையீடு

சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

கீழமை நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை 15-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடிகர் விமல் மேல்முறையீடு செய்து, தனது ஓராண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரியிருந்தார்.

இதனிடையே, தனக்கு எதிரான காசோலை மோசடி வழக்கில் போலியான மற்றும் மோசடியான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்துத் தனியாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் விமல் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விமலின் கோரிக்கையை ஏற்க மறுத்து மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT