Loading...
சென்னை எழும்பூர் ஆல்பர்ட் திரையரங்கம் நிரந்தரமாக மூடப்படுகிறது: 48 ஆண்டுகால சினிமா வரலாற்றுக்கு முடிவு
சென்னை எழும்பூர் ஆல்பர்ட் திரையரங்கம் நிரந்தரமாக மூடப்படுகிறது

சென்னை எழும்பூர் ஆல்பர்ட் திரையரங்கம் நிரந்தரமாக மூடப்படுகிறது: 48 ஆண்டுகால சினிமா வரலாற்றுக்கு முடிவு

எழுதியவர் Venkatalakshmi V
Nov 25, 2026
02:31 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் சினிமா ரசிகர்களின் கொண்டாட்டக் களமாகவும், சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகவும் திகழ்ந்த எழும்பூர் ஆல்பர்ட் திரையரங்கம் நிரந்தரமாக மூடப்பட உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 48 ஆண்டுகளாக ஆல்பர்ட் மற்றும் பேபி ஆல்பர்ட் ஆகிய இரண்டு திரைகளுடன் வெற்றிகரமாகச் செயல்பட்டு வந்த இந்த திரையரங்க வளாகம் தற்போது விற்பனைக்கு வரவுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில், ஒரு காலகட்டத்தின் நினைவுச் சின்னமாக ஆல்பர்ட் திரையரங்கம் திகழ்ந்து வந்தது. குறிப்பாக, நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களின் முதன்மை திரையரங்கமாகக் கருதப்பட்ட இங்கு, 'பாட்ஷா' மற்றும் 'படையப்பா' ஆகிய திரைப்படங்கள் நீண்ட நாட்கள் காட்சிப்படுத்தப்பட்டு மாபெரும் வசூல் சாதனை படைத்தன. ஆல்பர்ட் திரையரங்கில் நிலவும் வரவேற்பு, அப்படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் அளவுகோலாகப் பார்க்கப்பட்டது.

காரணம்

திரையரங்கம் மூடப்படுவதற்கான காரணம்

நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக லட்சக்கணக்கான சினிமா ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவங்களை வழங்கிய இத்திரையரங்கம் திடீரென மூடப்படுவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேறு ஏதேனும் திரையரங்க நிறுவனங்கள் இந்த வளாகத்தைக் கையகப்படுத்திப் புதுப்பித்து மீண்டும் இயக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இருப்பினும், திரையரங்கிற்கு மிக அருகில் அமைந்துள்ள மதுபானக் கடையால் ஏற்படும் இடையூறுகள் மற்றும் மது அருந்திவிட்டு வரும் சிலரால் உருவாகும் சூழல் காரணமாக, இதனை மீண்டும் திரையரங்கமாக நடத்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு எனத் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சவால்கள்

பாரம்பரியத் திரையரங்குகள் எதிர்கொள்ளும் சவால்கள்

நவீன மல்டிபிளக்ஸ் திரையரங்குகளின் வருகை, அதிகரித்து வரும் பராமரிப்புச் செலவுகள் மற்றும் மாறிவரும் பார்வையாளர்களின் ரசனை ஆகியவற்றால் சென்னையின் பல பழமையான ஒற்றைத் திரை மற்றும் இரட்டைத் திரை அரங்குகள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன.

நிலத்தின் மதிப்பு உயர்ந்து வருவதும், வணிக ரீதியான சவால்களும் பாரம்பரியத் திரையரங்க உரிமையாளர்களை மாற்று முடிவுகளை நோக்கித் தள்ளுகின்றன.

எழும்பூர் ஆல்பர்ட் திரையரங்கின் மூடல் என்பது வெறும் வணிக நிறுவனத்தின் முடிவாக மட்டுமல்லாமல், சென்னை மாநகரின் சினிமா கலாச்சாரத்தின் ஒரு பொற்கால அத்தியாயத்தின் நிறைவாகப் பார்க்கப்படுகிறது.

திருவிழாக் கோலம் பூண்ட முதல் நாள் முதல் காட்சி கொண்டாட்டங்களும், ரசிகர்களின் ஆரவாரமும் இனி நினைவுகளாக மட்டுமே எஞ்சியிருக்கும் சூழல் உருவாகியுள்ளது.

ADVERTISEMENT