
நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் தர்மேந்திராவின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
செய்தி முன்னோட்டம்
மர்ம நபர் ஒருவர், நாக்பூர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று(பிப்.,28), செவ்வாய்க்கிழமை,தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மும்பையில் உள்ள அமிதாப் பச்சனின் பங்களா மற்றும் தர்மேந்திராவின் இல்லத்திற்கு அருகில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.
இதையடுத்து, மும்பை நகரில் உள்ள போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஊடக செய்திகளின் படி, தகவல் தெரிந்ததும், நாக்பூர் போலீசார் உடனடியாக மும்பை போலீசாரை எச்சரித்துள்ளனர்.
தொடர்ந்து, வெடிகுண்டு தடுப்புக் குழு, நடிகர்கள் வீட்டிற்கு விரைந்ததாகவும், தீவிர தேடுதல் பிறகு, அவ்வாறு எந்தவொரு ஆபத்தான பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் தெரிகிறது.
மேலும், தொலைபேசியில் பேசிய மர்ம நபர், பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவதற்காக, 25 ஆயுதம் ஏந்திய இளைஞர்கள் கடல் வழி, மும்பை நகரை வந்தடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மும்பை
மும்பையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
மும்பையில் உள்ள ஜூஹு, வைல்-பார்லே மற்றும் காம்தேவி ஆகிய இடங்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அந்த நபர் கூறியதையடுத்து, போலீசார், அந்த இடத்தில வசிக்கும் இந்த இரு பிரபலங்களையும் தங்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளதாகவும் தெரிகிறது.
மும்பையில் உள்ள அமிதாப் பச்சனின் வீட்டில், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தனது ரசிகர்களை சந்திக்க, அமிதாப் வெளியே வருவார். மும்பை நகரின் அடையாளமாக அவரின் இல்லம் பார்க்கப்படுகிறது. மும்பை நகரின், ஜூஹுவில் உள்ளது அமிதாப் பச்சனின் ஒரு வீடு. அவருக்கு, மும்பையில் மேலும் ஐந்து ஆடம்பர பங்களாக்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் தர்மேந்திராவும், ஜூஹூவில் உள்ள ஒரு ஆடம்பர பங்களாவில் வசிக்கிறார்.