விருந்தினர்களை அழைத்துச் செல்ல 3 பால்கன்-2000 ஜெட் விமானங்களை வாடகைக்கு எடுத்துள்ள அம்பானி
நாளை, ஜூலை 12 ஆம் தேதி முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட்டின் திருமணம் மும்பையில் நடைபெறவுள்ளது. இந்த விழாவிற்கு வருகைதரும் விருந்தினர்களை அழைத்துச் செல்ல அம்பானிகள் மூன்று பால்கன்-2000 ஜெட் விமானங்களை வாடகைக்கு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து ஏர் சார்ட்டர் நிறுவனமான கிளப் ஒன் ஏர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜன் மெஹ்ரா, திருமண விருந்தினர்களை அழைத்துச் செல்ல அம்பானிகள் தனது நிறுவனத்தின் மூன்று ஃபால்கன்-2000 ஜெட் விமானங்களை வாடகைக்கு எடுத்துள்ளதாகவும், நிகழ்ச்சிகளுக்கு 100க்கும் மேற்பட்ட தனியார் விமானங்கள் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்றும் கூறினார். "விருந்தினர்கள் எல்லா இடங்களிலிருந்தும் வருகிறார்கள், ஒவ்வொரு விமானமும் நாடு முழுவதும் பலமுறை பயணிக்கும்"என்று அவர் ராய்ட்டர்ஸிடம் கூறினார்.
போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது
மூன்று நாட்கள் நடைபெறும் அம்பானி இல்ல திருமண விழாவின் முக்கிய நிகழ்வு ஜூலை 12 வெள்ளிக்கிழமை நடைபெறும். அதே வேளையில், அடுத்த இரண்டு நாட்களில் முறையே ஆசீர்வாதத்திற்கான ஒரு நாள் (சுப் ஆஷ்ர்வாத்) மற்றும் மற்றொரு வரவேற்பு நிகழ்ச்சி ஞாயிற்றுகிழமை நடைபெறும். இதற்காக மும்பையின் விழா நடைபெறும் இடத்தை சுற்றிலும் போக்குவரத்து மாறுதல்களும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. மும்பையின் பாந்த்ரா குர்லா மையத்தில் (BKC) உள்ள ஜியோ உலக மையத்தில் இந்த திருமணம் நடைபெறும். இதனால் ஜூலை 12 தொடங்கி ஜூலை 15 வரை, மதியம் 1 மணி முதல் நள்ளிரவு வரை திருமண விழாவிற்கு கலந்துகொள்ள வரும் வாகனங்களுக்கு மட்டுமே அங்கிருக்கும் சாலையில் பயணிக்க அனுமதி உண்டு.