திரைப்படமாக தயாராகும் 'அரிசி கொம்பன்' ஆண் யானையின் கதை - பர்ஸ்ட் லுக் போஸ்டர்
கேரளாவின் மூணாறு சின்னக்கானல், சாத்தம்பாறை ஊராட்சிகளில் கலக்கும் அரிசி கொம்பன் ஆண் யானையின் கதையினை மலையாளத்தில் 'அரி கொம்பன்' என்னும் பெயரில் திரைப்படமாக எடுத்து வருகிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. பெரியகானல் பகுதியின் அருகே இறந்து கிடந்த யானையின் அருகே குட்டியாக இருந்த அரிசி கொம்பன் யானை நடத்திய பாசப்போராட்டம் முதல், வனத்துறையினரால் மயக்க ஊசி போட்டு பெரியார் புலிகள் காப்பகம் எடுத்து செல்லும் வரையிலான சம்பவங்களை மையப்படுத்தி திரைப்பட துவக்கம் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தினை சாஜித் யாஹியா இயக்குகிறார், நடிகர்களுக்கான தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது. கதையின் நாயகனான அரிசி கொம்பனாக நடிக்க பிற யானைகள் மற்றும் கும்கி யானைகளின் தேர்வு நடந்து முடிந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை - தேனி வனத்துறை
அரிசி கொம்பன் நடமாடிய சின்னக்கானல் பகுதியிலேயே படப்பிடிப்பினை மேற்கொள்ள வனத்துறையினரிடம் அனுமதி பெறவுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் பாதுஷா தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இதற்கிடையே புலிகள் காப்பகத்தில் விடப்பட்ட அரிசி கொம்பன் யானையானது தமிழ்நாடு தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதியில் இரவங்கலாறு-மணலாறு பகுதிகளுக்கு இடையே நுழைந்துள்ளதாக வனத்துறையினர் தகவல் அளித்துள்ளார்கள். இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் இரவு நேர பயணத்தினை தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும், இது குறித்து அப்பகுதி மக்கள் அச்சமடைய தேவையில்லை, நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று தேனி வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.