தி கோட் படத்தில் மேலும் 2 பாடல்கள், அதில் ஒன்று... சஸ்பென்ஸ் வைத்த இயக்குனர் வெங்கட் பிரபு
நடிகர் விஜயின் தி கோட் படத்தின் மேலும் இரண்டு பாடல்கள் குறித்த அப்டேட்டை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். முன்னதாக, மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், 'மட்ட' என்ற பெயரிலான நான்காவது பாடல் சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. மற்ற பாடல்களை விட இந்த பாடலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், படத்தில் மேலும் இரண்டு பாடல்கள் இருப்பதாக இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், இந்த இரண்டு பாடல்களில் ஒன்று புதிதாகவும், ஒன்று மிகவும் விரும்பப்படும் ரீமிக்ஸ் பாடலாகவும் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
Twitter Post
ரெட்ரோ பாடல்களுக்கு வரவேற்பு
தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜ் ரெட்ரோ பாடல்களை பயன்படுத்திய பிறகு, சமீப காலமாக ரெட்ரோ பாடல்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. பழைய பாடல்களை வெறுமனே ரீமிக்ஸ் செய்யாமல், அதே பாடலை அப்படியே பயன்படுத்துவதால், இது ஈர்ப்பைப் பெறுவதாகக் கூறப்படுகிறது. நடிகர் விஜய் கடைசியாக நடித்த லியோ படத்திலும் இதுபோன்ற ஒரு பாடல் இருந்த நிலையில், இன்னும் வெளியிடப்படாத ரீமிக்ஸ் பாடல் இந்த வகையில் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. நடிகர்கள் விஜய்-த்ரிஷா இணைந்து நடனமாடும் பாடல் ஒன்று படத்தில் இருப்பதாக நீண்ட காலமாக கூறப்பட்டு வரும் நிலையில், அது இந்த பாடலாக இருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, பிரேம்ஜி குரலில் விசில் போடு ரீமிக்ஸ் பாடல் ஏற்கனவே படத்திலிருந்து வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.