நடிகை அனிகா சுரேந்திரனுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்; அதிர்ச்சியில் ரசிகர்கள்
நடிகர் அஜித்துடன் 'என்னை அறிந்தால்' படத்தில், குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை அனிகா சுரேந்திரன். கௌதம் மேனன் இயக்கிய அந்த திரைப்படத்தில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி பலரின் பாராட்டை பெற்றார் அவர். தொடர்ச்சியாக மலையாளம், தமிழ் என பல படங்களில் நடித்தார் அனிகா. இவரும், அஜித்தும் நடித்த 'கண்ணான கண்ணே' பாடல் தேசிய விருது பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. MX பிளேயரில் வெளியான முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று தொடரான 'குயின்'-இல் சிறு வயது ஜெயலலிதாவை நம் கண் முன்னே கொண்டு வந்தார். தொடர்ந்து அவர் பல போட்டோ ஷூட்களை நடத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். 'குட்டி நயன்' என்றெல்லாம் அழைக்க தொடங்கினர் ரசிகர்கள்.
அதிர்ச்சியை தந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டர்
அனிகா, ஹீரோயினாக தெலுங்கு படம் ஒன்றில் நடித்தார். அந்த படத்தில் இடம்பெற்ற 'லிப்லாக்' காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தின. ஆனால், அனிகாவோ அதை பற்றி எல்லாம் சட்டை செய்யாமல் தொடர்ந்து படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். இந்நிலையில், அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலானது. அந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டரில், அனிகாவின் புகைப்படம் போட்டு, (peon) ரத்தினத்தின் மகளான நந்தினி காலமானார் என்றும், அவர் இறந்த தேதி ஜூலை 16 என்றும் அச்சிடப்பட்டிருந்தது. அதனால் குழம்பிய ரசிகர்களுக்கு, பின்னால் தான் தெரியவந்தது, அது அனிகாவின் அடுத்த படத்திற்கான ப்ரோமோஷன் போஸ்டர் என்று. "இப்படியெல்லாமா டா படத்தை ப்ரொமோட் பண்ணுவீங்க?!" என ரசிகர்கள் நொந்து கொண்டனர்.