அன்று சமந்தா, நேற்று நயன்தாரா..தொடர்ச்சியாக ஆயுர்வேத மருத்துவத்தை விமர்சிக்கும் லிவர் டாக்டர் யார்?
நடிகை நயன்தாரா இரு தினங்களுக்கு முன்னர் செம்பருத்தி தேநீரின் ஆரோக்கிய நற்பலன்களை பற்றி ஒரு இன்ஸ்டாகிராம் பதிவை இட்டிருந்தார். உடனே, லிவர் டாக் ஆன் எக்ஸ் என அழைக்கப்படும் டாக்டர் சிரியாக் அப்பி பிலிப்ஸ் அதனை கடுமையாக விமர்சித்தார். அவரது விமர்சனங்கள் நயன்தாராவின் பார்வைக்கு வந்ததோ என்னமோ தெரியாது, நயன்தாரா அந்த பதிவை டெலீட் செய்து விட்டார். எனினும், நயன்தாராவின் ஊட்டச்சத்து நிபுணர் இன்ஸ்டாகிராமில் தொடர்ச்சியாக இது குறித்த ஆதாரங்களுடன் பதிவுகள் இட்டு பதிலடி கொடுத்தார். லிவர் டாக்டர் இதற்கு முன்னர் சமந்தாவின் பதிவிற்கும் விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பிரபலங்களின் ஆரோக்கியம் சார்ந்த பதிவுகளை விமர்சிக்கும் லிவர் டாக்டர் யார்? அவர் இது போல சர்ச்சைகளில் சிக்குவது புதிதல்ல என்பது தெரியுமா?
யார் இந்த லிவர் டாக்டர்?
கேரளாவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹெபடாலஜிஸ்ட் (கல்லீரல் நோய் நிபுணர்) டாக்டர். பிலிப்ஸ். இவர், சமூக ஊடகங்களில் பரவலான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார். மாற்று மருத்துவர்களான ஆயுர்வேத, சித்தா போன்றவற்றில் உள்ள தவறான தகவல்களை எதிர்த்துப் போராடுவதற்கும், சான்றுகள் அடிப்படையிலான நவீன மருத்துவ நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும் அவரது சோசியல் மீடியாவை பயன்படுத்தி வருகிறார். பாரம்பரிய மூலிகை மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படும் கல்லீரல் பாதிப்புகளைக் குறித்து அவர் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். பாரம்பரிய மருத்துவம் பற்றிய அவரது வெளிப்படையான விமர்சனம் சர்ச்சை இல்லாமல் இல்லை. குறிப்பாக ஆயுஷ் மருத்துவத்தின் பயிற்சியாளர்கள் மத்தியில், டாக்டர் பிலிப்ஸின் கருத்துகள் அவதூறானவை என்று வலியுறுத்துகின்றனர்.
சர்ச்சைகளில் சிக்குவது இது முதல்முறை அல்ல
இந்த லிவர் டாக்டர் இது போன்ற கருத்துகளுக்கு பெயர் போனவர். சமந்தா, நயன்தாரா மட்டுமின்றி, இதுபோன்ற கருத்துகளை தெரிவித்தமைக்காக அவர் ஹிமாலயாஸ் நிறுவனத்தின் சட்ட வழக்கு ஒன்றையும் எதிர்கொண்டுள்ளார். கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம், பெங்களுரு நீதிமன்றம், எக்ஸ் நிறுவனத்திடம் லிவர் டாக்டரின் சமூக ஊடகக் பக்கத்தை, இடைநிறுத்த அல்லது தடுக்குமாறு அறிவுறுத்தி உத்தரவிட்டது. இந்த சட்ட நடவடிக்கையானது ஹிமாலயா வெல்னஸ் நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கைத் தொடர்ந்து வந்தது. அதில், ஹிமாலயாஸ் தயாரிப்புகள் குறித்து டாக்டர் பிலிப்ஸ் தரக்குறைவான அறிக்கைகளை வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, இது வணிகத்தில் குறிப்பிடத்தக்க இழப்புக்கு வழிவகுத்தது என தெரிவிக்கப்பட்டது.