
சகோதரர் ராம்குமார் பெற்ற கடனுக்கு நான் பொறுப்பல்ல: நடிகர் பிரபு வாதம்
செய்தி முன்னோட்டம்
நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும், தயாரிப்பாளர் ராம்குமாரின் மகனும், நடிகருமான துஷ்யந்த் மற்றும் அவரது மனைவி அபிராமி பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த 'ஜகஜால கில்லாடி' படத்திற்காக, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் ரூ.3 கோடிக்கும் மேலே கடன் பெற்றிருந்தது.
அந்த கடனை திருப்பி செலுத்தாததால், வட்டி உட்பட 9 கோடி 39 லட்சம் ரூபாயை செலுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதற்காக, 2024 மே 4ஆம் தேதி மத்தியஸ்தர், படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு ஒப்படைக்க உத்தரவிட்டார்.
அதன் பிறகு, பட உரிமைகளை ஒப்படைக்காததால், தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து, பொது ஏலம் விட உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
சிவாஜி வீடு
இந்த வழக்கில் சிவாஜியின் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது
இந்த வழக்கின் விசாரணையில், நீதிமன்றம் தி.நகரில் உள்ள சிவாஜி கணேசனின் வீட்டை (அன்னை இல்லம்) ஜப்தி செய்ய உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்ய, நடிகர் பிரபு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதேபோல, ராம்குமாரும், தன்னுடைய நிறுவனத்திற்கும், பிரபுவிற்கு சம்மந்தமில்லை எனவும், அந்த வீடு பிரபுவிற்கு சொந்தமானது எனவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்று பிரபு தரப்பு, இது மூன்றாம் நபரின் சொத்து எனவும், ஜப்தி உத்தரவை நீக்க வேண்டும் என வாதிட்டது.
மேலும், பிரபு, தன் சகோதரர் ராம்குமார் பெற்ற 3 கோடி ரூபாய் கடனுக்காக தன்னுடைய 150 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்குவதை எதிர்த்தும் வாதிட்டார்.
வாதம்
நீதிமன்றத்தில் பிரபுவின் வாதம்
பிரபுவின் வாதத்தை கேட்ட நீதிபதி,"ராம்குமார் உங்கள் சகோதரர் தானே? நீங்கள் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறீர்களா? கடனை நீங்கள் செலுத்திவிட்டு பின்னர் அவரிடம் இருந்து திரும்பப் பெறலாமே?" எனக் கேட்டார்.
இதற்குப் பிரபுவின் வழக்கறிஞர், "ராம்குமார் பலரிடம் கடன் வாங்கியுள்ளார், எனவே என்னால் இந்த வழியில் உதவ முடியாது" எனக் கூறினார்.
இதனையடுத்து நீதிமன்றம் வழக்கின் விசாரணையை ஏப்ரல் 8ஆம் தேதி வரை தள்ளிவைத்தது.