நயன்தாரா ஆவணப்படம்: ரூ.10 கோடி கேட்டு தனுஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
Netflix நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான "Nayanthara: Beyond the Fairy Tale" என்ற ஆவணப்படத்தில் தனது படத்தின் காட்சிகள் இடம்பெற்றதினால் ரூ.10 கோடி நஷ்டஈடு கோரி நடிகர் தனுஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் பின்னணி
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் எனக்கூறப்படும் நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களின் காதல் மற்றும் திருமண வாழ்க்கையை மையமாக வைத்து உருவான ஆவணப்படம் "Nayanthara: Beyond the Fairy Tale" என்ற பெயரில், நவம்பர் 18 அன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த படத்தில், "நானும் ரவுடிதான்" படத்தின் பாடல் காட்சிகளை வெளியிட படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷிடம் தடையின்மை சான்று (NOC) கோரப்பட்டது. ஆனால், அவர் இவர்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு பதில் அளிக்கவில்லை. இரண்டு ஆண்டுகளாக பதில் சொல்லாமல், தடையின்மை சான்று தராமல் இருந்ததை தொடர்ந்து, நயன்தாரா அவரை விமர்சித்து ஓபன் லெட்டர் வெளியிட்டு பரபரப்பு கிளப்பினார்.
NOC இன்றி ஆவணப்படத்தில் இடம்பெற்ற படத்தில் காட்சிகள்
"நானும் ரவுடிதான்" படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட மூன்று வினாடி BTS காட்சிகள் ஆவணப்படத்தில் இடம்பெற்றதாகவும், இதற்காக 10 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று தனுஷ் கோரியிருந்தார். ஆனால், தனுஷின் கோரிக்கைக்கு எந்த பதிலும் அளிக்காமல், அந்த காட்சிகளுடன் ஆவணப்படம் வெளியானது. அதன்பின்னரும் காட்சிகளை நீக்க கால அவகாசம் வழங்கி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. எனினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், இன்று, தனுஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆவணப்படத்தில் தனுஷ் தயாரித்த படத்தின் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும், இதற்கு தன்னிடம் அனுமதி பெறவில்லை என அவர் தெரிவித்துள்ளார். ஆகவே, ரூ.10 கோடி நஷ்டஈடு கோரியுள்ள வழக்கில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பதில் அளிக்க வேண்டும் என தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.