
இனி ரேஸில் தான் முழு கவனம்? அஜித் குமார் ரேஸிங் என்ற புதிய கார் ரேஸிங் கம்பெனியைத் தொடங்கினார் நடிகர் அஜித்
செய்தி முன்னோட்டம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தாலும், கார் மற்றும் பைக் ரேஸில் நடிகர் அஜித் தீவிர ஆர்வம் கொண்டவர் ஆவார்.
படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் அவர் பைக்கில் சாகச பயணங்கள் செல்லும் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாகும் நிலையில், சமீபத்தில் அவர் ரூ.9 கோடி மதிப்பில் ஃபெராரி கார் ஒன்றை வாங்கினார்.
மேலும், அதைத் தொடர்ந்து துபாயில் ரூ.4 கோடி மதிப்பிலான போர்ஷே ஜிடி3 காரையும் வாங்கியுள்ளார்.
இதைத் தொடர்ந்து அவர் கார் ரேசருக்கான உடையுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி, அவர் விரைவில் ஐரோப்பாவில் நடக்க உள்ள ரேஸில் பங்கேற்கபோவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, நடிகர் அஜித் கார் ரேஸிங் நிறுவனத்தை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அஜித் குமார் ரேஸிங்
சுரேஷ் சந்திரா அறிவிப்பின் முழு விபரம்
நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட எக்ஸ் பதிவில், அஜித் குமார் ரேஸிங் என்ற ஒரு புதிய நிறுவனத்தின் அற்புதமான சாகசத்தின் தொடக்கத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த ரேஸிங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பந்தய ஓட்டுநராக பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஃபேபியன் டஃபியக்ஸ் இருப்பார் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் நடைபெற உள்ள 24எச் சீரீஸில் போர்ஷே 992 ஜிடி3 கப் பிரிவில் இந்த அணி களமிறங்க உள்ளது.
அஜித் ஏற்கனவே 2004 ஃபார்முலா ஆசியா பிஎம்டபிள்யூ எப்3 சாம்பியன்ஷிப் மற்றும் 2010 ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. உரிமையாளர் என்பதைத் தவிர, மீண்டும் பந்தய இருக்கையில் நடிகர் அஜித் அமர உள்ளத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.