2023ஆம் ஆண்டு ஆஸ்கார் விருது வென்ற இந்தியர்கள் யார் யார்?
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் மாகாணத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற அகடமி எனப்படும் 95வது ஆஸ்கர் விருதுகள் விழாவில், இந்தியாவை சேர்ந்த இரண்டு படைப்புகளுக்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. சினிமாக்களுக்கான நோபல் பரிசு என அறியப்படும் ஆஸ்கர் விருதுகளை வெல்வது, ஹாலிவுட் படங்களை தவிர்த்து மற்ற படங்களுக்கு சிம்ம சொப்பனமாகவே இருந்துவருகிறது. இந்தியாவிலிருந்து ஏற்கனவே இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான், குல்சார் ஆகியோர் ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ள நிலையில், இந்த பட்டியலில் இந்த ஆண்டு மேலும் இருவர் இணைந்துள்ளனர். அவர்கள் யார், எதற்காக ஆஸ்கர் வென்றார்கள் என உங்கள் நினைவுகளை புதுப்பிக்கவே இந்த தொகுப்பு.
ஆஸ்கர் வென்ற ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல்
ராஜமௌலி இயக்கத்தில், ஜூனியர் என்டிஆர், ராம்சரண் உள்ளிட்டோர் நடித்திருந்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் குறிப்பாக 'நாட்டு நாட்டு' பாடலின் நடனம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு கீரவாணி இசையமைத்திருந்த நிலையில், நாட்டு நாட்டு சிறந்த பாடலுக்கான கோல்டன் குளோப் விருதையும் தட்டிச் சென்றது. ஆஸ்கர்க்கு அனுப்பப்பட்ட இப்பாடல், சிறந்த ஒரிஜனல் பாடல் பிரிவில் இசையமைப்பாளர் கீரவாணிக்கு ஆஸ்கரை வென்று தந்தது. இசையமைப்பாளர் கீராவாணியுடன், பாடலை எழுதிய சந்திரபோஸும் ஆஸ்கர் விருதைப் பெற்றனர். ஆஸ்கர் மேடையில் சிறப்பு பாடலாக ஒளிக்க விடப்பட்ட நாட்டு நாட்டு பாடலுக்கு, அமெரிக்க நடனக் கலைஞரான லாரன் காட்லீப் (Lauren Gottlie) நடனமாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார்.
ஆஸ்கார் வென்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம்
இந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்கர் விழாவில் சிறந்த சிறு ஆவணப்படங்கள் பிரிவில், முதுமலை யானைகள் முகாமில் நடைபெற்ற உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்ட தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆஸ்கார் விருது வென்றது. இக்குறும்படத்தை கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கியிருந்த நிலையில், பழங்குடியின தம்பதியான பெள்ளி, பொம்மன் கதை இதில் ஆவணப்படுத்தப்பட்டு இருந்தது. தாயைப் பிரிந்த யானை குட்டிகளை இத்தம்பதியினர் பராமரித்து வருகின்றனர். யானைக்கும் இவர்களுக்குமான உணர்வுபூர்வமான கதை தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம். தர்மபுரி மாவட்டத்தில் வனப்பகுதியில் தாயை பிரிந்து பலத்த காயமடைந்துள்ள குட்டி யானையை, யாரும் பராமரிக்க முன்வராத போது பொம்மன் அதை பராமரிக்க ஒப்புக்கொள்கிறார். இதற்கு துணையாக பெள்ளியும் சேர்ந்து கொள்கிறார். அந்த குட்டி யானைக்கு ராகு என அவர்கள் பெயரிடுகிறார்கள்.
ஆஸ்கருக்கு அடித்தனம் அமைத்த யானைகள் மீதான அன்பு
பொம்மன் தான் கூறியது போலவே அந்த யானையை இயல்பு நிலைக்கு தேற்றுகிறார். பின்னர், பெள்ளிக்கும் அம்மு என்ற குட்டி யானை பராமரிக்க வழங்கப்படுகிறது. யானைகள் மீது இத்தம்பதி கொண்டு இருந்த அளவு கடந்த அன்பே, தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம் ஆஸ்கர் வெல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. ஆஸ்கர் வென்ற செய்தியை பொம்மனிடமும், பெள்ளியிடமும் கூறிய போது, அவர்கள் அது பற்றி எதுவும் தெரியாது என ஊடகங்களில் பேசியது அனைவரையும் நிகழச் செய்தது.