"இன்ஸ்பெக்டர் முதல் ஐபிஎஸ் வரை"- போலீசாக விஜயகாந்த் கலக்கிய கதாபாத்திரங்கள்
தமிழ் சினிமாவில் 150 திரைப்படங்களுக்கு மேல் நடித்து, கமலஹாசன், ரஜினிகாந்துக்கு இணையாக மாஸ் ஹீரோவாக வலம் வந்தவர் விஜயகாந்த். தனது சினிமா வாழ்க்கையில் பல கதாபாத்திரங்களில் நடித்து வெற்றி படங்களை வழங்கியிருந்தாலும், விஜயகாந்த் என்றாலே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது அவரின் போலீஸ் கதாபாத்திரங்கள் தான். ஒரு காலகட்டத்தில், காவல்துறையில் சேர நினைப்பவர்கள், விஜயகாந்த் திரைப்படத்தை பார்த்து தங்களை தயார்படுத்திக் கொண்டதாக தகவல்கள் உள்ளது. அப்படி பல்வேறு படங்களில் திறமையான போலீஸ் அதிகாரியாக நடித்த விஜயகாந்த்க்கு, முதலில் அந்த கதாபாத்திரங்கள் வெற்றியை தரவில்லை. சிவந்த கண்கள், சாட்சி, ஜனவரி 1 ஆகிய திரைப்படங்களில் விஜயகாந்த் போலீசாக நடித்திருந்தாலும், ஊமை விழிகள் திரைப்படம் அவரின் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது.
ஊமை விழிகள்
ஃபிலிம் இன்ஸ்டியூட் மாணவர்களான, ஆபாவாணன் எழுத்தில் அரவிந்த்ராஜ் இயக்கிய ஊமை விழிகள் திரைப்படத்தில், பலரும் நடிக்க தயங்கிய வயதான டிஎஸ்பி தீனதயாளன் கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடித்திருப்பார். படத்தின் கிளைமாக்ஸ் இல், யாராலும் நெருங்க முடியாத கொடூர கொலை காரனை, விஜயகாந்த் கைது செய்ய முயலும் காட்சிகள், இன்றும் கைதட்ட வைப்பவை. படம் மாபெரும் வெற்றி பெற்று, விஜயகாந்த் பின்னர் வந்த பல படங்களில் தொடர்ந்து காவல்துறை கதாபாத்திரங்களில் நடிக்க, இப்படம் அடித்தளம் ஏற்படுத்திக் கொடுத்தது. இதனை தொடர்ந்தே, சினிமாவிற்குள் நுழைய விரும்பும் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் மாணவர்களுக்கு, ராவுத்தர் சினிமாஸ் இரண்டாம் தாய் வீடாக ஆனது.
புலன் விசாரணை
ஊமை விழிகள் வெற்றிக்கு பின்னர், தர்மம் வெல்லும், சிறைப்பறவை உள்ளிட்ட பல படங்களில் விஜயகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்தாலும், அவை எவையும் ஊமை விழிகள் வெற்றியை தொடவில்லை. மற்றொரு ஃபிலிம் இன்ஸ்டியூட் மாணவரான ஆர்.கே.செல்வமணி இயக்கிய புலன் விசாரணை திரைப்படம், விஜயகாந்த் என்றாலே போலீஸ் தான் என மக்கள் மனதில் பதியவைத்தது. உதவி கமிஷனர் ஹானஸ்ட் ராஜ் கதாபாத்திரத்தில் கலக்கிய விஜயகாந்துக்கு, படம் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதன் மாபெரும் வெற்றிக்கு பின்னர், தனது நூறாவது படத்தை இயக்கும் வாய்ப்பையும் செல்வமணிக்கு விஜயகாந்த் வழங்கினார். தமிழ் சினிமாவில் பெரும்பான்மையான நடிகர்களுக்கு நூறாவது படம் தோல்வியடையும். ஆனால், விஜயகாந்துக்கு நூறாவது படமான கேப்டன் பிரபாகரன் மாபெரும் வெற்றிபெற்றதைத் தொடர்ந்தே, அவர் 'கேப்டன்' என அழைக்கப்பட்டார்.
சத்ரியன்
இயக்குனர் மணிரத்தினத்தின் எழுத்தில், சுபாஷ் இயக்கத்தில் வெளிவந்த சத்ரியன் திரைப்படம், காவல்துறை கதாபாத்திரமாக விஜயகாந்த் நடிப்பிற்கு மற்றொரு எடுத்துக்காட்டு. காவல்துறையை விட்டு விலகிய அசிஸ்டன்ட் கமிஷனர் பன்னீர்செல்வத்தை(விஜயகாந்த்), சீண்டும் திலகனுக்கும் இடையே நடக்கும் வார்த்தை போர் நமக்கு புல்லரிப்பை ஏற்படுத்தும். காவல்துறை பணியில் மீண்டும் விஜயகாந்த் சேர முயற்சிப்பதும், அதை திலகன் தடுப்பதும், கிளாசிக் ஹீரோ-வில்லன் மோதலாக படத்தில் சுபாஷ் காட்சிப்படுத்தியிருப்பார். இப்படத்தில் அவர் பேசும், 'சத்திரியனுக்கு சாவே இல்லை' என்ற வசனம், இப்போது நினைவு கூறத்தக்கது.
மாநகர காவல் முதல் அரசாங்கம் வரை
இதன் பின்னர், விஜயகாந்த் நடித்த மாநகர காவல், ராஜதுரை, சேதுபதி ஐபிஎஸ், வீரம் விளைஞ்ச மண்ணு, அலெக்ஸாண்டர், வல்லரசு, வாஞ்சிநாதன், தேவன், நரசிம்மா, பேரரசு, இறுதியாக அரசாங்கம் வரை பல்வேறு கவனிக்கத்தக்க காவல்துறை கதாபாத்திரங்களை ஏற்று விஜயகாந்த் நடித்தார். தமிழ் சினிமாவில் அதிகமான காவல்துறை கதாபாத்திரங்களில் நடித்த பெருமை விஜயகாந்தையே சாரும். இருப்பினும், அவரின் ஒவ்வொரு திரைப்படத்திற்கும், கதையில் வேறுபாட்டை காட்ட முயற்சித்து இருப்பார். அதுவே அவரை, தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத சக்தியாக வைத்திருந்தது.