லியோ 25வது நாள்- போஸ்டர் வெளியிட்டு தயாரிப்பு நிறுவனம் பெருமிதம்
விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியான லியோ திரைப்படம், 25 நாட்களைக் கடந்து சாதனை படைத்ததை, தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. கடும் சர்ச்சைகள் மற்றும் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பு மத்தியில் வெளியான லியோ திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றாலும், தமிழ்நாடு, இந்திய மற்றும் உலகளவில் வசூலை வாரி குவித்தது. படம் வெளியான முதல் நாளிலேயே ₹148 கோடி வசூல் செய்த லியோ திரைப்படம், அதனைத் தொடர்ந்து உலக அளவில் ₹540 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு படத்தின் 25வது நாள் சாதனை போஸ்டரை வெளியிட்டு, தயாரிப்பு நிறுவனம் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
நவம்பர் 16ல் ஓடிடியில் லியோ?
திரையரங்குகளில் மாபெரும் வெற்றி பெற்ற லியோ திரைப்படத்தின், ஓடிடி வெளியீட்டு உரிமையை நெட்பிலிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருந்தது. தீபாவளியை முன்னிட்டு ஓடிடியில் லியோ திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர் விடுமுறையையொட்டி திரையரங்குகளில் லியோ படத்தை பார்க்க ரசிகர்கள் வரலாம் என்பதால் ஓடிடியில் வெளியிடவில்லை. இதனை தொடர்ந்து, லியோ திரைப்படம் நவம்பர் 16 ஆம் தேதி நெட்ஃப்லிக்சில் வெளியாவதாக தகவல்கள் பரவி வருகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.