பிளிங்கிட்டில் மேலும் ரூ.300 கோடியை முதலீடு செய்தது சொமாட்டோ
விரைவாக டெலிவரி செய்யும் நிறுவனங்கள் பிரிவில் போட்டி சூடுபிடித்துள்ளதால், தனது துணை நிறுவனமான பிளிங்கிட்டில் ரூ.300 கோடியை சொமாட்டோ முதலீடு செய்துள்ளது. இதனையடுத்து, பிளிங்கிட்டில் சொமாட்டோ செய்திருக்கும் மொத்த முதலீட்டு தொகை ரூ.2,300 கோடியாக உயர்ந்துள்ளது. க்ரோஃபர்ஸ் என்று முன்பு அழைக்கப்பட்ட பிளிங்கிட் நிறுவனத்தை 2022 இல் சொமாட்டோ வாங்கியது. ரூ.4,447 கோடி மதிப்பிலான ஒப்பந்தன் கீழ் பிளிங்கிட் வாங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பொருளாதார ரீதியாக அந்த நிறுவனத்தை மீட்டெடுத்த சொமாட்டோ அதை ஒரு பிரபலமான டெலிவரி தளமாக மாற்றியுள்ளது. தற்போது சொமாட்டோவின் உணவு விநியோக வணிகம் பெரும் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
பிளிங்கிட்டுக்கு போட்டியாக நிற்கும் பிரபல நிறுவனங்கள்
இந்நிலையில், இந்த புதிய முதலீடு பிளிங்கிட்டை வேகமாக விரிவுபடுத்த உதவும். அடுத்த 12 மாதங்களில் 474 புதிய டாக் ஸ்டோர்களை சேர்ப்பதன் மூலம் அதன் கடைகளின் எண்ணிக்கையை கிட்டத்தட்ட இரட்டிப்பாக்க சொமாட்டோ நிறுவனம் தீர்மானித்துள்ளது. இந்த விரிவாக்கம், விரைவான டெலிவரி சந்தையில் பிளிங்கிட்டின் நிலையை உறுதிப்படுத்தி அதன் போட்டியாளர்களை அது விஞ்சும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவாக டெலிவரி செய்யும் துறையில் சொமாட்டோவின் முக்கிய போட்டியாளரான ஸ்விக்கி அதன் ஆரம்ப பொது வழங்கலுக்கு(IPO) தயாராகி வருகிறது. அது போக, செப்டோ, பிக்பாஸ்கெட், பிளிப்கார்ட், ஜியோ மார்ட் உள்ளிட்ட நிறுவனங்களும் பிளிங்கிட்டுக்கு போட்டியாக களம் இறங்கியுள்ளன.