50 ஆண்டு வளர்ச்சியை ஆறு ஆண்டுகளில் எட்டிய இந்தியா; உலக வங்கி பாராட்டு
2014இல் நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புகளால் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி பாராட்டியுள்ளது. ஜி20 நிதிச் சேர்க்கைக்கான உலகளாவிய கூட்டாண்மையின் ஒரு பகுதியாக உலக வங்கியால் தயாரிக்கப்பட்ட ஆவணத்தில், மோடி அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் மற்றும் இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புகளை வடிவமைப்பதில் அரசாங்கக் கொள்கை மற்றும் ஒழுங்குமுறையின் முக்கிய பங்கை விரிவாக விளக்கியுள்ளது. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சிறப்பான சாதனைகளில் ஒன்றாக ஜன் தன் யோஜனா வங்கி கணக்கு திட்டம் உள்ளது. டிஜிட்டல் உள்கட்டமைப்பை மேம்படுத்தியதன் மூலம், கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு நிகரான வளர்ச்சியை வெறும் 6 ஆண்டுகளில் இந்தியா அடைந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கும் யுபிஐ
இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு பொதுத்துறையை மாற்றியமைத்தது மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்களுக்கான செயல்திறனையும் மேம்படுத்தியுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவின் வங்கி சேவையில் யுபிஐ அறிமுகம் புதிய பாய்ச்சலுக்கு வழிவகுத்தது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2022-23 நிதியாண்டில், யுபிஐ பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 50 சதவீதத்தை எட்டியது. மேலும், இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையேயான யுபிஐ-பேநவ் இன்டர்லிங்கிங், பிப்ரவரி 2023 இல் செயல்படுத்தப்பட்டது. இது ஜி20இன் நிதிச் சேர்க்கை முன்னுரிமைகளுக்கு ஏற்ப, வேகமாகவும், மலிவாகவும், மிகவும் வெளிப்படையானதாகவும் எல்லை தாண்டிய கட்டணங்களை எளிதாக்கியுள்ளது என்று அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.