முன்னணி தொழிலதிபராக இருந்தும் பணக்காரர் பட்டியலில் இடம்பெறாத ரத்தன் டாடா; காரணம் தெரியுமா?
மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா உலகளவில் மிகவும் செல்வாக்கு மிக்க வணிகத் தலைவர்களில் ஒருவராக இருந்தார். ஆறு கண்டங்களில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கும் 30 நிறுவனங்களின் கூட்டுக்கு தலைமை தாங்கினார். அவரது பரந்த செல்வாக்கு மற்றும் உலகளாவிய ரீதியில் வணிகம் இருந்தபோதிலும், உலகின் சிறந்த பில்லியனர் தரவரிசையில் அவரது பெயர் ஒருபோதும் இருந்ததில்லை. ஆறு தசாப்தங்களாக நாட்டின் மிகப்பெரிய வணிகக் குழுமத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த ஒருவர், நாட்டின் முதல் 10 அல்லது முதல் 20 பணக்காரர்களின் பட்டியலில் இல்லை என்பது ஆச்சரியம்தான். ஆனாலும், இது ஒரு உண்மை. டாடா டிரஸ்ட் மூலம் டாடா குடும்பம் செய்த பெரிய அளவிலான தொண்டு வேலைகளும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.
ஜாம்செட்ஜி டாடா உருவாக்கிய விதி
உண்மையில், டாடா குடும்ப உறுப்பினர்கள் பாரம்பரியமாக தங்கள் சொந்த நிறுவனங்களில் குறைந்தபட்ச தனிப்பட்ட பங்குகளையே வைத்திருக்கிறார்கள். டாடா குழுமத்தின் நிறுவனர் ஜாம்செட்ஜி டாடா, டாடா சன்ஸ் ஈட்டிய லாபத்தின் பெரும்பகுதியை டாடா அறக்கட்டளைக்கு சேவை நோக்கங்களுக்காக வழங்க வேண்டும் என்ற வழிகாட்டும் கொள்கையை நிறுவினார். பில் கேட்ஸ் போன்றவர்களுக்கு முன்பே டாடா குடும்பம் சேவைப் பணிகளில் முன்னோடியாக இருந்து வருகிறது. டாடா குழுமத்தை ஒரு மென்பொருள் மற்றும் விளையாட்டுத் துறையுடன் உலக அளவில் நன்கு அறியப்பட்ட வணிகக் குழுவாக மாற்றிய பெருமை ரத்தன் டாடாவுக்கு உண்டு. ரத்தன் டாடாவின் 21 ஆண்டுகால தலைமைப் பணியில் டாடா குழுமத்தை, உப்பு முதல் எஃகு வரையிலான தொழில்களில் ஈடுபடுத்தி, புதிய உயரத்திற்கு அழைத்துச் சென்றார்.