மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்; 8வது ஊதியக்குழு அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
செய்தி முன்னோட்டம்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் படிகளை திருத்தும் நோக்கில் 8வது ஊதியக்குழு அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பட்ஜெட் 2025 தாக்க செய்வதற்கு முன்னதாக, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வியாழக்கிழமை (ஜனவரி 16) இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
8வது ஊதியக் குழுவால் அரசு ஊழியர்களுக்கு கணிசமான சம்பள உயர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆணையத்தின் அமலாக்கம் மற்றும் காலக்கெடு தொடர்பான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை, விரைவில் அதன் அமைப்பை மேற்பார்வையிட ஒரு தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏழாவது ஊதியக்குழு
ஏழாவது ஊதியக்குழுவின் பதவிக்காலம்
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. முன்னதாக, 2016 இல் அமல்படுத்தப்பட்ட 7வது ஊதியக்குழுவின் பதவிக்காலம் 2026ல் முடிவடையும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
8வது ஊதியக் குழுவின் ஒப்புதல், பொருளாதாரம் மற்றும் பணியாளர்களின் வளர்ச்சியின் பரந்த நோக்கங்களுடன் இணைந்து, அதன் ஊழியர்களின் நிதித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
ஊதியக் குழு அமைப்பதற்கான செயல்முறை முன்னேறும்போது கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றன.
இதற்கிடையே, பட்ஜெட் 2025 தாக்கல் செய்ய இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், அதில் வரி சலுகைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் வருமான வரி செலுத்தும் மாதாந்திர ஊதியம் பெறுபவர்களிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.