'உண்மை வென்றது': செபி விசாரணையை மாற்ற உச்ச நீதிமன்றம் மறுத்ததை அடுத்து கௌதம் அதானி பேச்சு
அதானி-ஹிண்டன்பர்க் வழக்கில் செபியின் விசாரணையை சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு மாற்ற உச்ச நீதிமன்றம் இன்று மறுத்ததை அடுத்து, "உண்மை வென்றது" என்று கூறி நீதிமன்றத்தின் முடிவை கௌதம் அதானி பாராட்டினார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அவர், "மாண்புமிகு சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பால் உண்மை வென்றுவிட்டது. வாய்மையே வெல்லும். எங்களுக்கு ஆதரவாக நின்றவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் வளர்ச்சிக் கதைக்கு எங்களது பணிவான பங்களிப்பு தொடரும். ஜெய் ஹிந்த்." என்று கூறியுள்ளார். அதானி-ஹிண்டன்பர்க் வழக்கை, பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்(செபி) விசாரிப்பது தொடர்பான பிரச்சனையில் தலையிட மறுத்த உச்ச நீதிமன்றம், வழக்கை சிறப்பு புலனாய்வு குழுவிற்கு மாற்ற முகாந்திரம் இல்லை என இன்று தெரிவித்தது.
அதானி-ஹிண்டன்பர்க் பிரச்சனை
அதானி குழும நிறுவனங்கள் பல்வேறு குளறுபடிகளில் ஈடுபடுவதாகக் கூறி இந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனமான ஹின்டன்பர்க். அந்த அறிக்கையின் அடிப்படையில் அதானி குழுமங்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், ஹின்டன்பர்க் அறிக்கையில் உள்ள உண்மைத்தன்மை குறித்து விசாரணை மேற்கொள்ள இந்தியாவின் பங்கு மற்றும் பரிவர்த்தனை ஆணையமான செபிக்கு உச்சநீதிமன்றம் உத்தவிட்டது. ஆனால், செபியின் விசாரணை மீது நம்பிக்கை இல்லாத சிலர், இந்த பிரச்சனையை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். அந்த கோரிக்கையை இன்று உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.