ஆதார் புதுப்பிப்புக்கான புதிய விதிகளை UIDAI வெளியிடுள்ளது
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் தகவல்களைத் திருத்துவதற்கான வழிகாட்டுதல்களைப் புதுப்பித்துள்ளது. இந்த புதிய நடைமுறையினால், ஆதார் புதுப்பித்தல் எளிமையாகும் என மத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது. முந்தைய 2016 விதிகள்படி, ஆன்லைன் மூலம் முகவரி புதுப்பிப்புகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. மற்ற மாற்றங்களுக்கு, பதிவு மையங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது. இப்போது, புதிய வழிகாட்டுதல்கள்படி, UIDAI இணையதளம், மொபைல் ஆப் அல்லது அருகிலுள்ள ஆதார் சேவை மையத்தை அணுகுவது ஆகிய மூன்று வழிகளில், ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலமாக மாற்றங்களை அனுமதிக்கின்றன. இதற்காக UIDAI ஆனது ஆதார் பதிவு மற்றும் புதுப்பிப்புகளுக்கான புதிய படிவங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பழைய படிவங்களை 1 முதல் 9 வரை வரிசைப்படுத்தியும் மாற்றியுள்ளது.
படிவ எண்கள் கூறுவது என்ன?
இந்த எண்களால் வரிசைப்படுத்தப்பட்ட படிவங்கள் முறையே, வெவ்வேறு வயதுக் குழுக்கள், வசிப்பிட நிலைகள் மற்றும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு என பகுக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, படிவம் 1 என்பது 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய குடியுரிமை பெற்ற தனிநபர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கானது. அதே சமயம் படிவம் 2 என்பது இந்தியாவிற்கு வெளியே முகவரிச் சான்றுடன் இருக்கும் NRIகளுக்கானது. புதிய வழிகாட்டுதல்களின்படி, ஆதார் அட்டைதாரர்கள் தங்கள் ஆதார் எண் உருவாக்கப்பட்ட நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் தகவலைப் புதுப்பிக்க முடியும். UIDAI இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலமாகவோ அல்லது பதிவு மையத்தில் படிவத்தைச் சமர்ப்பிப்பதன் மூலமாகவோ ஆன்லைனில் இதைச் செய்யலாம்.
புதிய வழிகாட்டுதல்களில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்
புதிய வழிகாட்டுதல்படி, ஒரு நபரின் வயது ஆவணச் சான்று இல்லாமல் அல்லது தோராயமாக தெரியப்படுத்தினால், ஆதார் அட்டையில் பிறந்த ஆண்டு (தேதி மற்றும் மாதம் அல்ல) மட்டுமே அச்சிடப்படும். ஆதார் பதிவு மற்றும் விவரங்களை புதுப்பித்தல் ஆகியவை ஆவண சரிபார்ப்பு அல்லது குடும்பத் தலைவர் (HoF) உறுதிப்படுத்துவதன் மூலம் செய்யப்படலாம். பிந்தைய முறையைப் பயன்படுத்தினால், குடும்பத்தலைவர் அவர்களின் ஆதார் விவரங்களை வழங்கி, படிவம் 1இல் கையொப்பமிட வேண்டும். NRI களுக்கு, செல்லுபடியாகும் இந்திய பாஸ்போர்ட் மட்டுமே அடையாளச் சான்றாக (POI) ஏற்றுக்கொள்ளப்படும். மேலும், ஒரு NRI வெளிநாட்டின் மொபைல் எண்ணை வழங்கினால், படிவம் 1 வழிகாட்டுதலின்படி அந்த எண்ணுக்கு SMS எதுவும் அனுப்பப்படாது.