இந்தியாவில் நுழைய தீவிரமாக களமிறங்கும் டெஸ்லா; ஆலையை அமைக்க நிலம் தேடுகிறது எனத்தகவல்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் மின்சார வாகன (EV) உற்பத்தி ஆலையை அமைக்க டெஸ்லா நிறுவனம் நிலத்தைத் தேடுகிறது என இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த போட்டியில் மகாராஷ்டிரா முன்னணி தேர்வாக இருப்பதாகவும் தி எகனாமிக் டைம்ஸ் (ET) அறிக்கை தெரிவிக்கிறது.
டெஸ்லா நிறுவனம் சாத்தியமான இடங்களை மதிப்பீடு செய்யத் தொடங்கியுள்ளது மற்றும் மாநில அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது எனவும் கூறப்படுகிறது.
அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடியை எலான் மஸ்க் சந்தித்த பிறகு, மகாராஷ்டிரா நோக்கி தனது கவனத்தை திருப்பியுள்ளது டெஸ்லா.
அறிக்கையின்படி, டெஸ்லா நிறுவனம் புனேவில் அலுவலகம் கொண்டிருப்பதால், மகாராஷ்டிரா தான் டெஸ்லாவின் விருப்பமான தேர்வாக உள்ளது. டெஸ்லாவின் பல சப்ளையர்களும் அந்த மாநிலத்தில்தான் உள்ளனர் என்பதால் விரிவாக்கத்திற்கான இயல்பான தேர்வாக அமைகிறது.
புனே
மஹாராஷ்டிராவில் ஏற்கனவே அமைந்திருக்கும் வாகன உற்பத்தியாளர் அலைகள்
இந்த வகையில் மகாராஷ்டிர அரசு, புனேவுக்கு அருகில் அமைந்துள்ள சக்கன் மற்றும் சிகாலி அருகே இடங்களை டெஸ்லாவிற்கு வழங்குவதாக கூறியதாக அந்த செய்தி அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
சக்கன், ஒரு முக்கிய ஆட்டோமொபைல் உற்பத்தி மையமாகும்.
அங்கே ஏற்கனவே மெர்சிடிஸ் பென்ஸ், டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா, வோக்ஸ்வாகன் மற்றும் பஜாஜ் ஆட்டோ போன்ற நிறுவனங்கள் அமைந்துள்ளன.
இருப்பினும், மகாராஷ்டிரா அதிகாரிகள் டெஸ்லா ஆலை அமைப்பதற்கான விவாதங்கள் இன்னும் நடந்து வருவதாகவும், இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர்.
டெஸ்லா ஒரு முடிவை எடுப்பதற்கு முன் துறைமுகத்திற்கு அருகாமையில் இருப்பது போன்ற காரணிகளை கவனமாக மதிப்பீடு செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
வேலை வாய்ப்பு
ஆட்சேர்ப்பு நடவடிக்கையை தொடங்கிய டெஸ்லா
ஒரு பெரிய முன்னேற்றமாக பார்க்கப்படும் நடவடிக்கையில், டெஸ்லா இந்தியாவில் ஆட்சேர்ப்பு நடவடிக்கையையும் தொடங்கியுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம், டெஸ்லா நிறுவனம் சந்தையில் நுழையத் தயாராக உள்ளது என்பதை மேலும் உறுதியாக்குகிறது.
டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் சமீபத்தில் அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
மின்சார வாகன (EV) தயாரிப்பு நிறுவனம், இப்போது 13 வெவ்வேறு பணிகளுக்கு விண்ணப்பங்களை கோரி அதன் LinkedIn பக்கத்தில் ஜாப் ஓப்பனிங் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தப் பதவிகள் மும்பை மற்றும் டெல்லியை அடிப்படையாகக் கொண்டவை மற்றும் வாகன சேவை, விற்பனை, வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் வணிக செயல்பாடுகள் உள்ளிட்டவை அடங்கும்.