மாருதியை பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க ஆட்டோமொபைல் நிறுவனமானது டாடா மோட்டார்ஸ்
டாடா மோட்டார்ஸின் பங்கு விலைகள் இன்று 5% அதிகரித்ததை அடுத்து, சந்தை மூலதனத்தில் மாருதி சுசுகியை டாடா விஞ்சியுள்ளது. இதனால், டாடா மோட்டார்ஸ் இந்தியாவின் மதிப்புமிக்க ஆட்டோமொபைல் நிறுவனமாக மகுடம் சூடியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, டாடா மோட்டார்ஸின் மூலதனம்(எம்-கேப்) ரூ. 3.24 லட்சம் கோடியாக உள்ளது. மாருதி சுஸுகியின் எம்-கேப் ரூ. 3.15 லட்சம் கோடி ஆகும். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, டாடா மோட்டார்ஸின் எம்-கேப் மீண்டும் மாருதி சுஸுகியைத் தாண்டி வளர்ந்துள்ளது. கடைசியாக ஜனவரி 25, 2017 அன்று மாருதி சுஸுகியை டாடா மோட்டார்ஸின் எம்-கேப் விஞ்சியது.
எதனால் டாடா மோட்டார்ஸின் எம்-கேப் அதிரடியாக உயர்ந்தது?
விற்பனையில் அதிக வளர்ச்சி, மேம்பட்ட தயாரிப்புகள் மற்றும் சாதகமான சந்தை சூழல் போன்ற பல்வேறு காரணிகளால் டாடா மோட்டார்ஸின் பங்குகளின் மதிப்பு உயர்ந்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மின்சார வாகனத்(EV) துறையில் அதன் தடத்தை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. அது, கணிசமான முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளது. டாடா மோட்டார்ஸ் CY2023இல் சுமார் 59,580 EVகளை விற்றது. அதனால், கடந்த ஆண்டு மட்டும் டாடா மோட்டார்ஸின் விற்பனையில் 86% வளர்ச்சியை காண முடிந்தது. இன்று பங்கு சந்தை நிறைவடையும் போது, டாடா மோட்டார்ஸின் பங்குகள் ரூ.864.90 ஆக இருந்தது. இது நேற்றை விட கிட்டத்தட்ட 3% அதிகமாகும்.