வோல்டாஸின் வீட்டு உபயோகப் பொருட்கள் வணிகத்தை விற்பனை செய்யும் டாடா?
வோல்டாஸ் (Voltas) நிறுவனத்தின் வீட்டு உபயோகப் பொருட்கள் வணிகத்தை விற்பனை செய்வது குறித்து டாடா குழுமம் பரிசீலனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளில் குளிரூட்டி (AC), குளிர்சாதனப் பெட்டி (Refridgerator), வாஷிங் மெஷின் உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்து வருகிறது வோல்டாஸ். வீட்டு உபயோகப் பொருட்கள் பிரிவில் தங்களுடைய வணிகத்தை விரிவாக்கம் செய்வதில் கடுமையான போட்டியை சந்தித்து வருகிறது வோல்டாஸ். இதனாலேயே அதனை விற்பனை செய்து குறித்து டாடா குழுமம் பரிசீலனை செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாடா வோல்டாஸ் விற்பனை:
துருக்கியைச் சேர்ந்த ஆர்செலிக் AS (Arcelik AS) நிறுவனத்துடன் இணைந்து வோல்டாஸ் பெகோ என்ற பெயரிலும் வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்து வருகிறது வோல்டாஸ். ஒருவேளை வோல்டாஸை விற்பனை செய்யும் பட்சத்தில், அதில் ஆர்செலி நிறுவனத்துடனான கூட்டு முயற்சியையும் சேர்க்க வேண்டுமா வேண்டாமா என்பது குறித்தும் டாடா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிகிறது. இந்த விற்பனை முடிவை மொத்தமாக கைவிட்டு, வோல்டாஸை தன்வசமே வைத்திருக்கவும் டாடா முடிவெடுக்கலாம் எனவும் கூறப்படுகிறது. வோல்டாஸை டாடா விற்பனை செய்யலாம் என்ற தகவலைத் தொடர்ந்து வோல்டாஸ் நிறுவனப் பங்குகள் இந்திய பங்குச்சந்தையில் 1.70% சரிவைச் சந்தித்து 813.80 ரூபாயில் இன்றைய வர்த்தகத்தை நிறைவு செய்திருக்கின்றன.