Loading...
டாடா சன்ஸ் மோதலில் திடீர் திருப்பம்: சந்திரசேகரனுக்கு ஆதரவு தெரிவித்து நோயல் டாடா மீது ஜிம்மி டாடா கடும் குற்றச்சாட்டு
சந்திரசேகரனுக்கு ஆதரவு தெரிவித்து நோயல் டாடா மீது ஜிம்மி டாடா கடும் குற்றச்சாட்டு

டாடா சன்ஸ் மோதலில் திடீர் திருப்பம்: சந்திரசேகரனுக்கு ஆதரவு தெரிவித்து நோயல் டாடா மீது ஜிம்மி டாடா கடும் குற்றச்சாட்டு

எழுதியவர் Sekar Chinnappan
Nov 16, 2026
08:02 pm

செய்தி முன்னோட்டம்

டாடா சன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகக் கட்டுப்பாடு தொடர்பான மோதல் தற்போது தீவிரமடைந்துள்ளது. மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் தம்பியும், சர் ரத்தன் டாடா அறக்கட்டளையின் மூத்த அறங்காவலருமான 85 வயதான ஜிம்மி நேவல் டாடா, டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரனுக்குத் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் டாடா சன்ஸ் பட்டியலிடல் மற்றும் சந்திரசேகரனின் மறுநியமனத்தை எதிர்த்து வரும் டாடா அறக்கட்டளைத் தலைவர் நோயல் டாடாவிற்கு எதிரான நிலைப்பாட்டை ஜிம்மி டாடா எடுத்துள்ளார்.

டாடா அறக்கட்டளை

டாடா அறக்கட்டளைகளில் நோயல் டாடா குடும்பத்தினரை நிரப்புவதாகக் குற்றச்சாட்டு

பொதுவெளியில் அதிகம் தோன்றாத ஜிம்மி டாடா, மூத்த அறங்காவலர் ஒருவரின் கேள்விக்கு அளித்துள்ள விரிவான அறிக்கையில் நோயல் டாடா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

தற்போதைய டாடா அறக்கட்டளைத் தலைவர் தனது குடும்ப உறுப்பினர்களை அறக்கட்டளைகளில் நியமித்து, டாடா சன்ஸ் மீதான கட்டுப்பாட்டைத் தன்வசமாக்க முயல்வதாக அவர் சாடியுள்ளார்.

அறக்கட்டளைகள் என்பவை பொதுமக்கள் நலனுக்காக உருவாக்கப்பட்டவை என்றும், அறங்காவலர்கள் பொதுச் சொத்துக்களின் பாதுகாவலர்கள் மட்டுமே தவிர உரிமையாளர்கள் அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பங்குச் சந்தை

ரகசியப் போக்கை ஒழிக்க டாடா சன்ஸ் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட வேண்டும்

இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) விதிமுறைகளின்படி டாடா சன்ஸ் நிறுவனத்தைத் தாமதமின்றி பங்குச் சந்தையில் பட்டியலிடுவது மிக அவசியம் என ஜிம்மி டாடா வலியுறுத்தியுள்ளார்.

பங்குச் சந்தை பட்டியலிடல் மட்டுமே நிறுவனத்திற்குள் நிலவும் ரகசியக் கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்து சட்டப்பூர்வ பொறுப்புடைமையை உறுதி செய்யும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் 2013-14-ல் திருத்தப்பட்ட சங்க விதிகள் தனிநபர் கைகளில் அதிகாரத்தைக் குவித்துவிட்டதால், அவற்றை மாற்றியமைத்து 1989-க்கு முந்தைய வணிகம் மற்றும் அறக்கட்டளை பிரிவினையை மீட்டெடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மத்திய அரசு தலையீடு

சந்திரசேகரன் சாதனைகளுக்கு பாராட்டும் ஆர்பிஐ மற்றும் மத்திய அரசு தலையீட்டிற்கு அழைப்பும்

கடனில் தத்தளித்த டாடா குழும நிறுவனங்களை லாபப் பாதைக்கு கொண்டு வந்த என்.சந்திரசேகரன், மூன்றாவது முறையாகத் தலைவராகத் தொடர வேண்டும் என ஜிம்மி டாடா ஆதரவு தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில் பங்குச் சந்தை பட்டியலிடலைத் தவிர்ப்பதற்காக டாடா சன்ஸ் நிறுவனத்தைப் பிரிக்கும் எந்தவொரு மறுசீரமைப்பு முயற்சியையும் ரிசர்வ் வங்கி அனுமதிக்கக் கூடாது என்றும், அறக்கட்டளைகளின் அடிப்படை நோக்கத்தைப் பாதுகாக்க மத்திய அரசும் தொண்டு ஆணையரும் உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ADVERTISEMENT