UPI கட்டண பாலிசிக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: அக்டோபர் 15 முதல் புதிய MDR விதிகள்
செய்தி முன்னோட்டம்
மத்திய அரசு அறிவித்துள்ள புதிய வணிகர் தள்ளுபடி வீதம் (MDR) கொள்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ₹2,000-க்கு மேற்பட்ட சில கூகுள் பே, போன்பே போன்ற UPI பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணம் விதிக்கும் அரசின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல மனுவை விசாரித்தபோது இம்முடிவு எடுக்கப்பட்டது. வரும் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள இந்த புதிய கொள்கையின்படி, ரூ.2,000-க்கு மேற்பட்ட பொதுவான வணிகர் பரிவர்த்தனைகளுக்கு (Person-to-Merchant) 0.4% வரை எம்பிஆர் கட்டணம் விதிக்கப்படும். ரூ.75,000 மற்றும் அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு உச்சபட்சக் கட்டணமாக ரூ.300 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கட்டண விதிகள்
புதிய UPI கட்டண விதிகள் என்ன?
நபருக்கு நபர் (Person-to-Person) இடையிலான பரிவர்த்தனைகள் மற்றும் ரூ.2,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு எவ்விதக் கட்டணமும் இன்றி இலவசமாகவே தொடரும்.
மாதத்திற்கு ரூ.1 லட்சம் வரை கூகுள் பே/போன்பே QR கோடு மூலம் பணப்பரிவர்த்தனை பெறும் சிறு வணிகர்களுக்கு இக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
கேள்வி
அரசின் விளக்கமும் உச்ச நீதிமன்றக் கேள்வியும்
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை கட்டமைப்பின் நிலையான வளர்ச்சிக்கு இந்த கட்டணம் அவசியமானது என்றும், நாட்டின் 96% UPI பரிவர்த்தனைகளுக்கு இதனால் எவ்விதப் பாதிப்பும் இருக்காது என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தலைமை நீதிபதி சூர்யா காந்த் அமர்வு இது ஒரு தொழில்நுட்பச் சார்ந்த விஷயமாக தெரிவதாக குறிப்பிட்ட நிலையில், நீதிபதி ஜாய்மால்யா பாக்சி இக்கட்டணத்தின் சட்டபூர்வத் தன்மை குறித்து கேள்வி எழுப்பினார்.
2007-ஆம் ஆண்டைய செலுத்துதல் மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தங்களை எதிர்த்து வழக்கறிஞர் அஞ்சன் தத்தா தாக்கல் செய்த இம் மனு குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.