யாரோ சொன்னாங்கனு முதலீடு செய்யாதீங்க! பின்ஃப்ளூயன்ஸர்களுக்கு செபி தலைவர் செக்; புராஜெக்ட் ஜாக்ரூக் தொடக்கம்
செய்தி முன்னோட்டம்
பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், போலி முதலீட்டு வழிகாட்டிகள் (Finfluencers) மற்றும் அநாமதேய ஆலோசனைகளை நம்பி ஏமாற வேண்டாம் என பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியின் தலைவர் துஹின் காந்த பாண்டே எச்சரித்துள்ளார். சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், புராஜெக்ட் ஜாக்ரூக் என்ற பிரம்மாண்ட முதலீட்டாளர் விழிப்புணர்வுத் திட்டத்தையும், மாணவர்களுக்கான 'MUST' எனும் அமைப்பையும் முறைப்படி தொடங்கி வைத்தார். கூடுதல் விபரங்கள் இங்கே:-
முதலீடு
புரிந்து கொண்டு முதலீடு செய்வதே பாதுகாப்பானது
அடையாளம் தெரியாத நபர்களின் குறிப்புகள், சோஷியல் மீடியா வழிகாட்டிகள் அல்லது குறுகிய காலத்தில் அதிக லாபம் தருவதாகக் கூறும் போலி வாக்குறுதிகளை நம்பி முதலீடு செய்யாதீர்கள் என செபி தலைவர் சுட்டிக் காட்டினார்.
"மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காகவோ அல்லது அனைவரும் முதலீடு செய்கிறார்கள் என்பதற்காகவோ ஒரு நிதி பொருளில் பணத்தைப் போட வேண்டாம்.
அந்த திட்டத்தைப் பற்றி நீங்கள் முழுமையாக புரிந்துகொண்டால் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும்." என்றும், அங்கீகரிக்கப்பட்ட இடைத்தரகர்கள் மற்றும் நிறுவனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இடைவெளி
விழிப்புணர்வுக்கும் முதலீட்டிற்கும் இடையே உள்ள பெரும் இடைவெளி
இந்திய குடும்பங்களில் பங்குச் சந்தை பற்றிய விழிப்புணர்வு கணிசமாக உயர்ந்துள்ள போதிலும், நேரடி முதலீட்டில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதாக செபி நடத்திய ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
நாட்டின் 63 சதவீதக் குடும்பங்களுக்குப் பங்குச் சந்தை தயாரிப்புகள் பற்றித் தெரிந்திருந்தாலும், 9.5 சதவீதத்தினர் மட்டுமே அதில் முதலீடு செய்கின்றனர்.
மேலும் முதலீட்டாளர்களில் 36 சதவீதத்தினருக்கு மட்டுமே சந்தை பற்றிய நடுத்தர அல்லது உயர் அறிவு உள்ளது.
கிராமப்புறங்களில் 6 சதவீதத்தினரும், நகர்ப்புறங்களில் 15 சதவீதத்தினரும் மட்டுமே சந்தையில் பங்கேற்கின்றனர்.
புராஜெக்ட் ஜாக்ரூக்
பிராந்திய மொழிகளில் 'புராஜெக்ட் ஜாக்ரூக்' விழிப்புணர்வு பிரச்சாரம்
இத்தகைய இடைவெளியை குறைப்பதற்காகவே செபி, பங்குச் சந்தைகள், டெபாசிட்டரிகள் மற்றும் என்ஐஎஸ்எம் இணைந்து புராஜெக்ட் ஜாக்ரூக் திட்டத்தைத் தொடங்கியுள்ளன.
சமஜ்சே இன்வெஸ்டிங் சிம்பிள் (Samajh Se Investing Simple) என்ற கருப்பொருளில் தமிழ் உட்பட 11 பிராந்திய மொழிகளில் தொலைக்காட்சி, டிஜிட்டல் தளங்கள், வாட்ஸ்அப் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக எளிய முறையில் நிதி விழிப்புணர்வு பிரச்சாரம் மார்ச் 2027 வரை கொண்டு செல்லப்படவுள்ளது.
மேலும் கிராமப்புற நிலப்பகுதிகளுக்கு பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்துடன் இணைந்து இத்திட்டம் கொண்டு செல்லப்படவுள்ளது.