கடன் செலுத்தப்பட்ட 30 நாட்களுக்குள் அசல் ஆவணங்களைத் திருப்பியளிக்க உத்தரவிட்ட ரிசர்வ் வங்கி
அவசர நேரங்களில் பொதுமக்கள் தங்களுடை அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை, வங்கிகள் அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் அடமானம் வைத்துக் கடன் பெறுவது வழக்கம். தங்களுடைய சொத்துக்களின் மீது வாங்கப்பட்ட கடனை கட்டி முடித்த பிறகும், குறிப்பிட்ட சில நிறுவனங்கள் அசல் ஆவணங்களைத் திரும்பத் தருவதைத் தாமதமாக்கி, வாடிக்கையாளர்களை இன்னல்களுக்கு ஆளாக்கும் சம்பவங்களும் அவ்வபோது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஒரு சொத்தின் மீது வாங்கப்பட்ட கடன் கட்டி முடிக்கப்பட்ட பிறகு, அது தொடர்பான ஆவணங்களை அடுத்த 30 நாட்களுக்குள் திருப்பியளிக்க வேண்டும் என அனைத்து வங்கிகளுக்கும், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது ரிசர்வ் வங்கி.
ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை:
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி அனுப்பிய சுற்றறிக்கையில், குறிப்பிட்ட சொத்தின் மீது கடன் வாங்கியவர்கள், அந்தக் கடனை திருப்பிய செலுத்திய 30 நாட்களுக்கு அசல் ஆவணங்கள் திருப்பியளிக்கப்பட வேண்டும். தவறும் பட்சத்தில், உரிய காரணத்தை வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் தெரிவித்திருக்க வேண்டும். இல்லையென்றால், நாளொன்றுக்கு ரூ.5,000-த்தை இழப்பீடாக கடனை கட்டி முடித்தவருக்கு செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி. மேலும், அசல் ஆவணங்கள் தொலைந்தாலோ அல்லது சேதமடைந்தாலோ, அவற்றை திரும்பப் பெறுவதற்கு உதவுவதோடு, அதற்குறிய கட்டணங்களை குறிப்பிட்ட நிதி நிறுவனங்கள் ஏற்க வேண்டும் எனவும் தங்களுடைய சுற்றறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி.