ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி
இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) கவர்னர் சக்திகாந்த தாஸ், உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 26) அனுமதிக்கப்பட்டார். அவர் அசிடிட்டியால் அவதிப்பட்ட நிலையில், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை குறித்து ஒரு அப்டேட்டை வழங்கியுள்ள ஆர்பிஐ, கவலைப்பட எதுவும் இல்லை என்றும் அவர் சில மணிநேரங்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறியது. ஆர்பிஐ தனது அறிக்கையில், "ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஸ்ரீ சக்திகாந்த தாஸ் அசிடிட்டியால் அவதிப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் நலமாக உள்ளார், அடுத்த 2-3 மணி நேரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்." என்று தெரிவித்துள்ளது.
ஆர்பிஐ கவர்னர் பதவிக்காலம் நீட்டிப்பு
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் வரும் டிசம்பர் 10 உடன் நிறைவடைய உள்ள நிலையில், இரண்டாவது பதவி நீட்டிப்பு குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் மீண்டும் நியமிக்கப்பட்டால், 1960களில் இருந்து அதிக காலம் பணியாற்றிய ரிசர்வ் வங்கியின் தலைவராக அவர் இருப்பார். டிசம்பர் 2018 இல் முதல்முறையாக நியமிக்கப்பட்ட சக்திகாந்த தாஸ், சமீபத்திய தசாப்தங்களில் காணப்பட்ட வழக்கமான ஐந்தாண்டு பதவிக் காலத்தை ஏற்கனவே தாண்டிவிட்டார். ரிசர்வ் வங்கியில் அவரது தலைமையின் கீழ், பணவீக்க அழுத்தங்கள் மற்றும் உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற நிலைகள் உட்பட பல்வேறு பொருளாதார சவால்களை இந்தியா கடந்து சென்றுள்ளது.