ரூபாயைக் காக்க ஆர்பிஐ அதிரடி: வெளிநாடுவாழ் இந்தியர்களின் பங்களிப்பால் $143.6 பில்லியன் அந்நியச் செலாவணி ஈர்ப்பு
செய்தி முன்னோட்டம்
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்ததைத் தொடர்ந்து, அந்நியச் செலாவணி பணப்புழக்கத்தை அதிகரிக்கவும் ரூபாயின் மதிப்பை சீரமைக்கவும் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கடந்த ஜூன் மாதம் சிறப்பு சலுகை திட்டங்களை அறிமுகப்படுத்தியது. இந்த ஃபாரெக்ஸ் ஸ்வாப் (Forex Swap) வசதி மூலம் இந்தியாவிற்கு $143.6 பில்லியன் டாலர் மதிப்பிலான அந்நியச் செலாவணி குவிந்துள்ளதாக ஆர்பிஐயின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கூடுதல் விபரங்கள் இங்கே:-
வெளிநாடுவாழ் இந்தியர்கள்
வெளிநாடுவாழ் இந்தியர்களின் வைப்புநிதியும் முன்கூட்டியே மூடிய ஜன்னலும்
இந்த பிரம்மாண்ட அந்நியச் செலாவணி வருகையில் வெளிநாடுவாழ் இந்தியர்களின் FCNR-B வைப்புநிதிகள் மட்டுமே மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளன.
ஆகஸ்ட் 31 நிலவரப்படி FCNR-B கணக்குகளில் $132.98 பில்லியன் டாலர் சேர்ந்துள்ளது.
வெளிநாடுவாழ் இந்தியர்களின் அமோக ஆதரவு காரணமாக, திட்டமிட்ட காலத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே FCNR-B வைப்புநிதி ஜன்னலை ரிசர்வ் வங்கி வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
புதிய கெடு
நிறுவனங்களின் வெளிநாட்டுக் கடன்களும் ஆர்பிஐயின் புதிய கெடுவும்
CNR-B வைப்புநிதிகள் தவிர, இந்திய நிறுவனங்களின் வெளிநாட்டு வர்த்தகக் கடன்கள் மூலம் $5.30 பில்லியன் டாலரும், வெளிநாட்டுச் செலாவணிக் கடன்கள் மூலம் $5.32 பில்லியன் டாலரும் இந்தியாவிற்குள் வந்துள்ளன.
இதில் வர்த்தகக் கடன்கள் மற்றும் வெளிநாட்டுக் கடன்களுக்கான ஸ்வாப் சலுகை வரும் டிசம்பர் 31 வரை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்பதால், மேலும் கூடுதல் அந்நியச் செலாவணி இந்தியாவிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாதனை அளவு
2013 வரலாற்று சாதனையை முறியடித்த ஆர்பிஐயின் புதிய சாதனை
சர்வதேச அளவில் பொருளாதார நிச்சயமற்ற சூழல் நிலவும் போது, வெளிநாடுவாழ் இந்தியர்களை ஈர்த்து டாலர் கையிருப்பை உயர்த்துவது ரிசர்வ் வங்கியின் வழக்கமான உத்தியாகும்.
இதற்கு முன்னதாகக் கடந்த 2013-ஆம் ஆண்டில் இதேபோன்ற சிறப்புச் சலுகை திட்டம் மூலம் சுமார் $26 பில்லியன் டாலர் ஈர்க்கப்பட்டது.
ஆனால் தற்போது $143.6 பில்லியன் டாலர் ஈர்க்கப்பட்டிருப்பது, இந்தியப் பொருளாதாரத்தின் மீதான சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீண்டும் நிரூபித்துள்ளது.