உலகத்தின் கவனத்தை ஈர்த்த ரத்தன் டாடாவின் இளம் நண்பர் சாந்தனு நாயுடு தற்போது எங்கிருக்கிறார்?
செய்தி முன்னோட்டம்
மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவுடனான இளவயது நண்பரும், அவரது PAவுமான சாந்தனு நாயுடு, டாடா சன்ஸ் நிறுவனத்தில் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய பிறகு, டாடா மோட்டார்ஸில் பொது மேலாளராகவும், மூலோபாய முயற்சிகளின் தலைவராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
32 வயதான சாந்தனு நாயுடு, தனது தொழில் வாழ்க்கை குறித்த பெரிய அப்டேட்டை லிங்க்ட்இனில் பகிர்ந்து கொண்டார்.
"டாடா மோட்டார்ஸில் மூலோபாய முயற்சிகள் துறையின் பொது மேலாளர், தலைவராக ஒரு புதிய பதவியைத் தொடங்குகிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!" என்று அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.
பயணம்
ரத்தன் டாடா உடனான சாந்தனுவின் நெருங்கிய பயணம்
இயந்திர பொறியியல் பட்டதாரியான சாந்தனு நாயுடு, டாடா எலக்ஸியில் சேருவதற்கு முன்பு டாடா டெக்னாலஜிஸில் பயிற்சியாளராக தனது தொழில்முறை பயணத்தைத் தொடங்கினார்.
2014 ஆம் ஆண்டு தான் அவர் முதன்முதலில் ரத்தன் டாடாவின் கவனத்தை ஈர்த்தார்.
ஆட்டோமொபைல் வடிவமைப்பு பொறியாளரான சாந்தனு நாயுடு, வீடற்ற நாய்களை வேகமாக வரும் வாகனங்களிலிருந்து பாதுகாக்க ஒரு பாதுகாப்பு கண்டுபிடிப்புடன் கூடிய நாய் காலர் வடிவமைப்பை உருவாக்கினார்.
விலங்கு பிரியராக அறியப்பட்ட ரத்தன் டாடா, இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடிவு செய்தது மட்டுமல்லாமல், அவரது வாழ்நாள் வழிகாட்டியாகவும் ஆனார்.
2018ஆம் ஆண்டில், சாந்தனு நாயுடு, டாடாவின் உதவியாளராகப் பொறுப்பேற்றார், இந்தப் பதவியே அவரை பொதுமக்களின் கவனத்திற்குக் கொண்டு வந்தது.
தொழில்
சாந்தனு நாயுடுவின் தொழில் முயற்சிகள்
தனது நிறுவன முயற்சிகளுக்கு அப்பால், சாந்தனு நாயுடு ஒரு தொழில்முனைவோரும் கூட.
2021ஆம் ஆண்டில், தனியாக வசிக்கும் மூத்த குடிமக்களுக்கு துணையாக இருப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தொடக்க நிறுவனமான 'Goodfellows'ஸை அவர் நிறுவினார்.
5 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த முயற்சிக்கு, ரத்தன் டாடா ஆதரவு அளித்தார்.
அக்டோபர் 9, 2024 அன்று தனது 86 வயதில் ரத்தன் டாடாவின் மறைவை தொடர்ந்து, சாந்தனு நாயுடு லிங்க்ட்இனில் ஒரு உணர்ச்சிபூர்வமான அஞ்சலியைப் பகிர்ந்து கொண்டார்.
"இந்த நட்பு இப்போது என்னுடன் விட்டுச் சென்றிருக்கும் இடைவெளியை, என் வாழ்நாள் முழுவதும் நிரப்ப முயற்சிப்பேன். துக்கம் என்பது அன்பிற்குக் கொடுக்க வேண்டிய விலை. விடைபெறுகிறேன், என் அன்பான கலங்கரை விளக்கமே ," என்று அவர் எழுதினார்.