Page Loader
தொழிலதிபர் ரத்தன் டாடா உயில்: குடும்பத்தினருக்கு மட்டுமல்ல; சமையல்காரர், உதவியாளர், வளர்ப்பு நாய்க்கும் சொத்து
அவரது உயில் தற்போது பாம்பே உயர் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட உள்ளது

தொழிலதிபர் ரத்தன் டாடா உயில்: குடும்பத்தினருக்கு மட்டுமல்ல; சமையல்காரர், உதவியாளர், வளர்ப்பு நாய்க்கும் சொத்து

எழுதியவர் Venkatalakshmi V
Oct 25, 2024
03:12 pm

செய்தி முன்னோட்டம்

சுமார் 10,000 கோடி ரூபாய் சொத்து இருக்கும் மறைந்த தொழிலதிபர்-பரோபகாரர் ரத்தன் டாடா, அவரது உடன்பிறப்புகளுக்காக ஒரு பங்கை விட்டுச் சென்றாலும், அவரது சமையல்காரர் மற்றும் ஜெர்மன் ஷெப்பர்ட் செல்ல நாய் டிட்டோவுக்கும் உயில் எழுதி வைத்துள்ளார். ரத்தன் டாடா தனது உயிலில் டிட்டோவுக்கு "வரம்பற்ற கவனிப்புக்கான" ஏற்பாடுகளைச் செய்திருக்கார் என்றும் அவரது சமையல்காரர் சுப்பையா மற்றும் நிர்வாக உதவியாளர் சாந்தனு நாயுடு ஆகியோருக்கும் ஒரு பங்கை ஒதுக்கியுள்ளார் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், தனது செல்லநாய் டிட்டோவை டாடாவின் நீண்டகால சமையல்காரரான ராஜன் ஷா கவனித்துக் கொள்வார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு ஆகும் செலவுகளை ஈடுகட்டும் வகையில் அவருக்கு சொத்துக்களை ஒதுக்கியுள்ளார்.

விவரங்கள்

யார் இந்த சமையல்காரர் மற்றும் உதவியாளர்?

டாடாவின் சமையல்காரன சுப்பையா, டாடாவுடன் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக பணிபுரிந்தார் மற்றும் டாடாவின் நம்பிக்கைக்குரியவர். டாடா தனது சமையல்காரர் ராஜன் மற்றும் சுப்பையா இருவருக்கும், வெளிநாடு செல்லும்போது எல்லாம், டிசைனர் ஆடைகளை வாங்கி வருவது வழக்கம் எனவும் செய்திகள் கூறுகின்றன. இதன்மூலம் அவர்கள் இருவருக்குமான நெருக்கம் புரியும். உதவியாளர் சாந்தனு நாயுடுவின் கூட்டு முயற்சியான குட்ஃபெலோஸ் நிறுவனத்திலும் ரத்தன் டாடா முதலீடு செய்திருந்தார். அவரது உயிலில், டாடா குட்ஃபெலோஸ் நிறுவனத்தில் தனது பங்குகளைத் துறந்தார் மற்றும் நாயுடு வெளிநாட்டில் படிப்பதற்காக வாங்கிய கடனைத் தள்ளுபடி செய்தார். செல்லப்பிராணியான ஜெர்மானிய ஷெப்பர்ட் டிட்டோ, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ரத்தன் டாடாவினால் தத்தெடுக்கப்பட்டது.

சொத்து

ரத்தன் டாடாவின் சொத்து விவரங்கள்

மேலே குறிப்பிட்டவர்களுடன், டாடா தனது அறக்கட்டளை, சகோதரர் ஜிம்மி டாடா, சகோதரிகள் ஷிரீன் மற்றும் டீன்னா ஜீஜாபோய் ஆகியோருக்கு சொத்துக்களை எழுதியுள்ளார். டாடாவின் சொத்துக்களில் அலிபாக்கில் 2,000 சதுர அடி கடற்கரை பங்களா, மும்பை ஜூஹுவில் உள்ள இரண்டு மாடி வீடு ஆகியவை அடங்கும். அவரது நிலையான வைப்புத்தொகை ரூ.350 கோடிக்கும் அதிகமாகவும், டாடா சன்ஸ் நிறுவனத்தில் 0.83% பங்குகள் இருப்பதாகவும் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. டாடா சன்ஸ் நிறுவனத்தில் அவரது பங்குகள் ரத்தன் டாடா எண்டோமென்ட் அறக்கட்டளைக்கு (ஆர்டிஇஎஃப்) மாற்றப்படும். டாடாவின் பல விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள் டாடா மத்திய ஆவணக் காப்பகத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும். அவரது உயில் தற்போது பாம்பே உயர் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட உள்ளது.