
முதல்முறையாக வேலைக்கு சேரும் ஊழியர்களுக்கு ரூ.15,000 வரை ஊக்கத்தொகை வழங்குகிறது மத்திய அரசு; விண்ணப்பிப்பது எப்படி?
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு அதிகாரபூர்வமாக பிரதம மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா (PMVBRY) போர்ட்டலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்திற்கு சுமார் ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா இந்த திட்டத்திற்கான இணையதள போரட்டலை தொடங்கி வைத்து, வேலை தேடுவோர் மற்றும் முதன்முறை வேலைவாய்ப்பு பெறுவோர் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். முன்னதாக, இந்த வேலைவாய்ப்பு சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஜூலை 1, 2025 அன்று ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ரூ.15,000
முதன்முறை ஊழியர்களுக்கு ரூ.15,000
இந்த மத்திய அரசு திட்டமானது, ஆகஸ்ட் 1, 2025 முதல் ஜூலை 31, 2027 வரையிலான இரண்டு ஆண்டுகளில் 3.5 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் இலக்குடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம், ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் என இரு தரப்பினருக்கும் ஊக்கத்தொகையை வழங்கும் வகையில் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி பகுதி ஏ'வின் கீழ், மாதத்திற்கு ரூ. 1 லட்சம் வரை மொத்த ஊதியம் பெறும் முதன்முறை ஊழியர்களுக்கு, அவர்களின் ஒரு மாத சராசரி ஊதியத்திற்கு (அடிப்படை ஊதியம் + அகவிலைப்படி) இணையான, (அதிகபட்சமாக ரூ.15,000 வரை) ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்தத் தொகை இரண்டு தவணைகளில் செலுத்தப்படும்.
நிறுவனங்கள்
வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களுக்கும் ஊக்கத்தொகை
பகுதி பி, கூடுதல் வேலைகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்குகிறது. குறிப்பாக உற்பத்தித் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஊழியரின் சம்பளத்தைப் பொறுத்து ஊக்கத்தொகை மாறுபடுகிறது. அதன்படி ரூ.10,000 வரை சம்பளம் பெறும் ஊழியர்களை சேர்க்கும் நிறுவனங்களுக்கு ரூ.1,000, ரூ. 10,000 முதல் ரூ. 20,000 வரை பெறுபவர்களுக்கு ரூ.2,000 மற்றும் ரூ. 30,000 வரை பெறுபவர்களுக்கு ரூ. 3,000 என ஒருமுறை ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த ஊக்கத்தொகையைப் பெற, 50க்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் குறைந்தபட்சம் இரண்டு கூடுதல் ஊழியர்களையும், 50க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட பெரிய நிறுவனங்கள் குறைந்தபட்சம் ஐந்து கூடுதல் ஊழியர்களையும் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு பணியமர்த்த வேண்டும்.
விண்ணப்பம்
எப்படி விண்ணப்பிப்பது?
இந்த ஊக்கத்தொகையைப் பெற ஊழியர்கள் எந்த போர்ட்டலிலும் எந்த விதமான பதிவும் செய்யத் தேவையில்லை. வேலைவாய்ப்பு போர்ட்டலின்படி, EPFO-வில் தங்கள் நிறுவனம் தாக்கல் செய்யும் விவரங்களின் அடிப்படையில் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். நிறுவனங்களைப் பொறுத்தவரை, EPFO-வில் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டவர்கள் இந்தத் திட்டத்திற்கு அவ்வாறு செய்யத் தேவையில்லை. இருப்பினும், அவர்கள் நிறுவனத்தின் பான் எண், ஜிஎஸ்டி எண், முதலாளியின் பான் கார்டு இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் ஷ்ரம் சுவிதா போர்டல் அல்லது கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் போர்டல் மூலம் பதிவு செய்யும் புதிய நிறுவனங்கள், இணைப்பு அல்லது பதிவு நேரத்தில் தானாகவே PF குறியீடு/EPF எண் ஒதுக்கப்படும்.
வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பை பெறுவதற்கான போர்டல்
ஊக்கத்தொகையை பெறுவதற்கு மேலே குறிப்பிட்டுள்ளதைத் தவிர தனி செயல்முறை எதுவும் தேவையில்லை என்று போர்டல் மேலும் கூறியது. எனினும், ஊழியர் பணியமர்த்தப்பட்ட நிறுவனத்தில் ஆறு மாதம் பணியாற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. வேலை தேடுவோர் மற்றும் வேலை கொடுக்கும் நிறுவனங்களுக்காக ஒரு பொதுவான போரட்டலாக https://pmvbry.epfindia.gov.in/ என்பதை மத்திய அரசு செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. பிரதான் மந்திரி விக்ஸித் பாரத் ரோஸ்கர் யோஜனாவின் கீழ் தொடங்கப்பட்டுள்ள இந்த போர்ட்டல் வேலை வாய்ப்புகளைத் தேடுபவர்களுக்கும், புதிய திறமையாளர்களை வேலைக்கு அமர்த்த விரும்பும் நிறுவனங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.