பங்குச்சந்தைக்கு வருகிறது ChatGPT-யின் OpenAI: உலகையே அதிரவைத்த $852 பில்லியன் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப உலகில் உலகளாவிய புரட்சியை ஏற்படுத்திய சாட்ஜிபிடி நிறுவனமான OpenAI, பங்குச்சந்தையில் நுழைவதற்கான முதற்கட்ட ரகசிய ஆவணங்களை அமெரிக்கப் பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியமான 'SEC'-யிடம் அதிகாரப்பூர்வமாகத் தாக்கல் செய்துள்ளது. இதன் மூலம், வால் ஸ்ட்ரீட் பங்குச்சந்தையில் களமிறங்கப்போகும் உலகின் மிக மதிப்புமிக்க 3 மாபெரும் AI நிறுவனங்களின் பட்டியலில் OpenAI-யும் இணைந்துள்ளது. கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம், திங்கள்கிழமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காரணம்
ஏன் இந்த அவசர அறிவிப்பு?
"நாங்கள் தாக்கல் செய்த ஆவணங்கள் எப்படியும் வெளியில் கசிந்துவிடும் என்பதால், நாங்களே இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறோம்" என்று OpenAI தனது அறிக்கையில் நகைச்சுவையுடன் குறிப்பிட்டுள்ளது. மேலும், "பங்குச்சந்தைக்கு வரும் துல்லியமான காலநேரத்தை நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. ஒரு தனியார் நிறுவனமாக இருக்கும்போது சில விஷயங்களைச் செய்வது எளிது. ஆனால், தற்போதைய சூழலில் பொதுப் பங்கு வெளியீட்டிற்கு (IPO) மாறுவதே சிறந்த தேர்வாக இருக்கும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளோம்" என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
போட்டி
வால் ஸ்ட்ரீட்டில் மோதிக்கொள்ளும் 3 பெரும் 'AI' சக்திகள்
சமீபகாலமாக முன்னணி நிறுவனங்கள் தங்களை AI மையப்படுத்திய நிறுவனங்களாக மாற்றி ஐபிஓ-விற்கு கொண்டு வரப் போட்டியிட்டு வருகின்றன SpaceX: எலான் மஸ்க்கின் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ், தன்னை "AI-சார்ந்த விண்வெளி நிறுவனம்" என முன்னிறுத்தி ஐபிஓவிற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது. Anthropic: OpenAI நிறுவனத்தின் முன்னாள் தலைவர்களால் தொடங்கப்பட்டு, 'கிளாட்' மூலம் உலகப் புகழ்பெற்ற ஆந்த்ரோபிக் நிறுவனம் கடந்த ஜூன் 1 அன்று ஐபிஓ-விற்குச் செல்வதாக அறிவித்தது. OpenAI: தற்போது ஆந்த்ரோபிக் அறிவிப்பு வெளியான ஒரு வாரத்திற்குள் OpenAI நிறுவனமும் தனது ஐபிஓ ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளது.
தற்போதைய நிலை
லாபமா? நஷ்டமா? - நிறுவனத்தின் தற்போதைய நிலை
கடந்த 2015-ஆம் ஆண்டு லாப நோக்கமற்ற அமைப்பாகத் தொடங்கப்பட்ட OpenAI, இன்று $852 பில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் ₹71 லட்சம் கோடி) மதிப்புமிக்க பிரம்மாண்ட நிறுவனமாக வளர்ந்துள்ளது. இந்த மதிப்புடன் பங்குச்சந்தைக்கு வந்தால், அமெரிக்காவின் 'S&P 500' குறியீட்டில் உள்ள டாப் 15 நிறுவனங்களில் ஒன்றாக OpenAI மாறும். இருப்பினும், அதிநவீன AI மாடல்களை உருவாக்குவதற்கான உள்கட்டமைப்புச் செலவுகள் மிக அதிகமாக இருப்பதால், ஆந்த்ரோபிக் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களைப் போலவே OpenAI-யும் தற்போது வருவாயை விட அதிக நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது.