டாடா டிரஸ்டின் தலைவராக நோயல் டாடா நியமனம்; டிரஸ்ட் கூட்டத்தில் முடிவு
செய்தி முன்னோட்டம்
வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11) டாடா குழுமத்தின் சேவைப் பிரிவான டாடா டிரஸ்ட்ஸின் தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டார்.
அதன் தலைவராக இருந்த ரத்தன் டாடா, கடந்த புதன்கிழமை உடல்நலக்குறைவால் மும்பையில் காலமான நிலையில், அவரது ஒன்றுவிட்ட சகோதரரான நோயல் டாடாவை தலைவராக, மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற டாடா டிரஸ்ட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ரத்தன் டாடா திருமணம் செய்து கொள்ளவில்லை. மேலும் டாடா டிரஸ்ட்ஸில் தனது வாரிசு என்று யாரையும் அவர் நியமிக்கவில்லை.
150 ஆண்டுகளுக்கும் மேலான டாடா பிராண்டின் கீழ் உள்ள பல்வேறு நிறுவனங்களின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் 66% பங்குகளை டாடா டிரஸ்ட்ஸ் கொண்டுள்ளது என்பதால் நோயலின் நியமனம் முக்கியத்துவம் வாய்ந்தது.
நோயல் டாடா
நோயல் டாடாவின் பின்னணி
2014 ஆம் ஆண்டு முதல், நோயல் டாடா குழுமத்தின் டிரெண்ட் லிமிடெட் நிறுவனத்தில் தலைவராக இருந்து வருகிறார். அதன் பங்குகள் கடந்த 10 ஆண்டுகளில் 6,000%க்கும் அதிகமாக உயர்ந்துள்ளன.
நோயல் முன்பு 2010 முதல் 2021 வரை டாடா இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்திற்கு தலைமை தாங்கினார்.
அவரது தலைமையில் நிறுவனத்தின் வருவாய் $500 மில்லியனில் இருந்து $3 பில்லியனாக உயர்ந்தது.
டாடா ஸ்டீல் லிமிடெட் மற்றும் வோல்டாஸ் லிமிடெட் உட்பட பல பட்டியலிடப்பட்ட டாடா நிறுவனங்களின் குழுவிலும் அவர் உள்ளார்.
67 வயதான நோயல் டாடா, ரத்தனின் தந்தையான நேவல் டாடா மற்றும் சிமோன் டாடா ஆகியோரின் மகன் ஆவார்.