வங்கிக் கணக்கு இல்லாவிட்டாலும் ₹50,000 வரை பணம் அனுப்பலாம்: ஆர்பிஐ புதிய வழிகாட்டுதல் வெளியீடு
செய்தி முன்னோட்டம்
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ள ஒருங்கிணைந்த உள்நாட்டு பணப் பரிமாற்ற வழிகாட்டுதல்கள் 2026, நவம்பர் 11 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இதன்படி வங்கிக் கணக்கு இல்லாத வாடிக்கையாளர்கள் கூட எந்தவொரு வங்கிக் கிளைக்கும் நேரில் சென்று ரொக்கப் பணத்தை செலுத்த முடியும். இவ்வாறு செலுத்தப்படும் பணத்தை தேசிய மின்னணு நிதிப் பரிமாற்றம் (NEFT) மூலமாக பயனாளியின் வங்கிக் கணக்கிற்கு அதிகபட்சம் ₹50,000 வரை நேரடியாக அனுப்பலாம் என ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.
பணம் அனுப்பும் வரம்புகள்
ஏடிஎம் மற்றும் வங்கிப் பிரதிநிதிகள் மூலம் பணம் அனுப்பும் வரம்புகள்
வங்கிக் கிளைகளுக்கு செல்ல முடியாத பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்கள் ஏடிஎம் இயந்திரங்கள் அல்லது வங்கிகளால் அங்கீகரிக்கப்பட்ட வணிகப் பிரதிநிதிகள் மூலமாகவும் பணப் பரிமாற்றம் செய்யலாம்.
ஆனால் இத்தகைய சேவைகளுக்குக் குறைந்தபட்ச உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சம் ₹5,000 மட்டுமே அனுப்ப முடியும் என்றும், ஒரு தனிநபர் ஒரு மாதத்தில் மொத்தமாக ₹25,000-க்கு மேல் அனுப்பக் கூடாது என்றும் ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்துள்ளது.
கேஷ் பே-அவுட்
வங்கிக் கணக்கு இல்லாதவர்களும் ரொக்கமாகப் பணம் பெறும் கேஷ் பே-அவுட் சேவை
வங்கிக் கணக்கு வைத்திருக்கும் ஒருவர், வங்கிக் கணக்கு இல்லாத தங்களது குடும்பத்தினருக்கு ரொக்கமாகப் பணம் அனுப்பும் வசதியையும் ரிசர்வ் வங்கி ஒழுங்குபடுத்தியுள்ளது.
இந்த சேவையின் கீழ் பணம் பெறுபவர் ஏடிஎம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வங்கிப் பிரதிநிதிகள் மூலமாகப் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
இதில் ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ₹10,000 வரையிலும், ஒரு பயனாளிக்கு ஒரு மாதத்தில் அதிகபட்சமாக ₹25,000 வரையிலும் மட்டுமே ரொக்கமாக வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் நலன்கள்
புலம்பெயர் தொழிலாளர்களுக்கான நலனும் வங்கிகளுக்கான பாதுகாப்புக் கட்டுப்பாடுகளும்
முறையான அடையாள ஆவணங்கள் இல்லாத புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் சாமானிய மக்கள் எளிதாகப் பணம் அனுப்புவதை உறுதி செய்யவே இந்த விதிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
அதே சமயம் இந்த வசதிகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க வங்கிகள் தீவிரக் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட கணக்குகளில் அசாதாரணமாகப் பணம் வரவு வைக்கப்பட்டால் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்றும், கார்டு-டூ-கார்டு (Card-to-card) பரிமாற்றங்களுக்கு இந்த விதிகள் பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.