இதுவரை இல்லாத அளவு 22,150 புள்ளிகளை எட்டியது நிஃப்டி 50
இன்றைய அமர்வில் நிஃப்டி 50, வரலாறு காணாத அளவு 22,150.75ஐ எட்டியுள்ளது. இந்தியாவில் பாம்பே பங்குச் சந்தை(BSE) மற்றும் தேசிய பங்குச் சந்தை(NSE) என்ற இரண்டு பங்கு சந்தைகள் இருக்கின்றன. இதில், பாம்பே பங்குச் சந்தையின் குறியீடு சென்செக்ஸ் என்றும், தேசிய பங்குச் சந்தையின் முதன்மைக் குறியீடு நிஃப்டி என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது, தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் முதன்மையான 50 நிறுவனங்களின் கூட்டு பங்குகள் தான் நிஃப்டி 50 ஆகும். நிஃப்டி எந்த அளவு உயர்கிறதோ அந்த அளவு தேசிய பங்குச் சந்தையின் மதிப்பு அதிகரித்துள்ளது என்று அர்த்தம் கொள்ளலாம். இந்நிலையில், இன்று பங்கு சந்தை தொடங்கியவுடன், நிஃப்டி 82.5 புள்ளிகள்(0.36%) அதிகரித்து 22,123 புள்ளிகளை எட்டி வரலாறு படைத்தது.
முன்னணியில் ஆட்டோ, பார்மா மற்றும் நுகர்வோர் பொருட்கள் துறைகள்
தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் முதன்மையான 50 நிறுவனங்களின் பங்குகள் வலுவாக உயர்ந்ததை அடுத்து, நிஃப்டியின் புள்ளிகள் 22,150.75ஐ எட்டியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம், நிஃப்டி 20,000 புள்ளிகளை முதல்முறையாக தாண்டி சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று சென்செக்ஸ் 0.31% உயர்ந்து 72,650 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது. ஆட்டோ, பார்மா மற்றும் நுகர்வோர் பொருட்கள் துறைகள் ஈட்டிய லாபத்தால் இன்று பங்குச் சந்தையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று பங்கு சந்தை தொடங்கிய போது, தோராயமாக 2,170 பங்குகள் முன்னேறின, 1,160 க்கும் மேற்பட்ட பங்குகள் சரிந்தன, 110 பங்குகள் எந்த மாற்றமும் இல்லாமல் வர்த்தகம் செய்யப்பட்டன.